திமுகவின் பெரிய பிளான்.. டெல்லிக்கு விரைந்த ஆளுநர் ரவி.. நடக்க போகும் முக்கிய சந்திப்பு
டெல்லி: நீட் தேர்வுக்கு விலக்கு கோரி வரும் 20ம் தேதி திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி இன்று காலை டெல்லி சென்றார்.அங்கு அவர் முக்கிய சந்திப்புகளை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவிக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே கடும் மோதல் போக்கு காணப்படுகிறது. திமுக அரசுக்கு எதிராக அடிக்கடி கருத்துக்களை ஆளுநர் ரவி தெரிவித்து வருகிறார். செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ரவி எடுத்த நடவடிக்கைகளை பரபரப்பாக பேசப்பட்டது.

அதேநேரம் அதிமுகவின் ஊழல் குறித்து அனுமதி அளிக்க எந்த அனுமதியும் தராமல் கிடப்பில் போடுவதாக ஆளுநருக்கு எதிராக ஸ்டாலின் அப்போது கொந்தளித்தார். இப்படி பல்வேறு விவகாரங்களில் திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
தமிழக அரசு சார்பில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்என் ரவி கிடப்பில் போட்ட நிலையில், அதுகுறித்து தமிழக முதல்வர் தொடர் கேள்வி எழுப்பி எழுப்பியதால் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பி வைத்தார் ஆளுநர். அதன்பின்னர் மீண்டும் தமிழக அரசு சார்பில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது அனுப்பிவைக்கப்பட்டது. அந்த மசோதாவை அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். மத்திய அரசின் கருத்தினை பெற்று குடியரசு தலைவர் மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்வார்.
இந்த சூழலில் கடந்த 12ம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்என் ரவி நீட் இளநிலை தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது சேலத்தை சேர்ந்த மாணவர் ஒருவரின் தந்தை, நீட் தேர்வுக்கு எப்போது தடை விதிக்கப்படும்? என்ற கேள்வியை முன்வைத்தார்.
அதற்கு ஆளுநர் ஆர்என் ரவி, ‛‛நீட் தேர்வுக்கு விலக்கு கேட்பது என்பது மாணவர்களின் போட்டிபோடும் திறனை கேள்விக்குறி ஆக்கிவிடும். நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டர் சென்று பயில வேண்டிய அவசியமில்லை. பள்ளிகளில் பாடம் நடத்தும் போதே நீட் தேர்வுக்கான பயிற்சி கொடுக்கலாம். நீட் தேர்வுக்கான விலக்கு அறிவுசார்ந்த மாணவர்களை மாற்றுத்திறனாளிகளாக மாற்றி விடும். எனவே நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட மாட்டேன். மேலும் கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுப்பியுள்ளேன்'' என தெரிவித்தார்.
ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சு தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுஒருபுறம் எனில் மறுநாள் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் 2 முறை நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்தார். இதனால் மனம் உடைந்த ஜெகதீஸ்வரனின் தந்தையும் அடுத்த நாளே தற்கொலை செய்து உயிரை மாய்த்தார். இந்த சம்பவத்தை அடுத்து நீட் தேர்வுக்கு கண்டிப்பாக தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற பலரும் அழுத்தம் கொடுத்தனர்.
இந்நிலையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி வரும் 20ம் தேதி திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி இன்று காலை 7.30 மணி அளவில் டெல்லிக்கு விமானத்தில் சென்றார், அங்கு அவர் சில முக்கிய சந்திப்புகளை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆளுநர் இன்று டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் முக்கிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
திமுக உண்ணாரவிரத போராட்டம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து டெல்லி தலைமை கேட்டறியும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications