டெல்லியில் ஆளுநர் ஆர்என்ரவி: உச்சநீதிமன்ற வழக்கு- உள்துறை அதிகாரிகள், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை!
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. நேற்று முதல் டெல்லியில் முகாமிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தில் தமக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில் உள்துறை அமைச்சக அதிகாரிகள், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட மசோதாக்கள், கோப்புகள் ஆகியவற்றை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலம் நிறுத்தி வைத்திருந்தார். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் கடந்த 10-ந் தேதி இந்த வழக்கை விசாரித்தது. தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி மற்றும் வில்சன் ஆகியோர் ஆஜராகினர். இந்த விசாரணையின் போது, ஆளுநர் நிலுவையில் வைத்துள்ள மசோதாக்கள் விவரங்களை பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு தரப்பு, மசோதாக்கள்- கோப்புகள் மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்கிற அதிகாரத்தை ஆளுநர் ரவி தவறாக பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டியது.
அப்போது கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச், சட்டசபை மசோதாக்களை ஆளுநர்கள் நிறுத்தி வைக்க முடியாது; அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்தது. இந்த வழக்கில் ஆளுநர் தரப்பில் பதிலளிக்கவும் மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறுகிறது.
இதனிடையே தம்மிடம் நிலுவையில் இருந்த 10 மசோதாக்களை சட்டசபைக்கே திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி. தமிழ்நாடு அரசு பதிலடியாக சிறப்பு சட்டசபை கூட்டத்தைக் கூட்டி 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் முகாமிட்டுள்ள ஆளுநர் ரவி இன்று உள்துறை அமைச்சக அதிகாரிகள், சட்ட வல்லுநர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் ஆளுநர் ரவி டெல்லியில் முகாமிட்டு ஆலோசனைகளை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications