சபாஷ்! இதுதான் தமிழ்நாடு.. தொடக்க கல்வியில் இடைநிற்றல் "ஜீரோ.." மத்திய அரசின் ஆய்வறிக்கையில் தகவல்
டெல்லி: மத்திய கல்வித் துறை அமைச்சகம் சார்பில் 2023- 2024ம் கல்வியாண்டிற்கான ஆய்வறிக்கை இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடைநிற்றல் விகிதம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதலாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை இடைநிற்றல் என்பதே இல்லை என அதில் கூறப்பட்டுள்ளது. எந்தெந்த மாநிலங்களில் இடைநிற்றல் என்னவாக இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவிலேயே மிகவும் சிறந்த ஒரு கல்வி கட்டமைப்பைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது. இதன் காரணமாகவே பட்டம் பெறுவோரின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது.

கல்வித்துறை அமைச்சகம்:
இதற்கிடையே மத்திய கல்வித்துறை அமைச்சகம் இப்போது முக்கியமான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களிலும் இருக்கும் பள்ளிகளை ஆய்வு செய்து மத்திய கல்வித்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் ஆய்வு அறிக்கை வெளியிடப்படும். அதன்படி 2023- 2024ம் கல்வியாண்டிற்கான ஆய்வறிக்கை இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடைநிற்றல் விகிதம் தொடர்பாக சில முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் இடைநிற்றல் இல்லை:
அதில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கல்வியில் தமிழ்நாட்டில் இடைநிற்றலே இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் 1ம் வகுப்பு படிக்கும் மாணவர் 8ம் வகுப்பு வரை தொடர்ச்சியாகப் பள்ளிக்கு வருகிறார். இடையில் எந்த வகுப்பிலும் மாணவர்களின் கல்வி தடைப்படுவதில்லை என்பது இதன் பொருளாகும்.
தொடக்கக் கல்வி (1 முதல் 5ம் வகுப்பு)மற்றும் மேல்நிலை (6 முதல் 8ம் வகுப்பு) என்று இரண்டு டேட்டாக்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தொடக்கப் பள்ளியைப் பொறுத்தவரைத் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம், டெல்லி, சண்டிகர், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இடைநிற்றல் ஜீரோவாக இருக்கிறது. மேல்நிலை (6 முதல் 8ம் வகுப்பு) கல்வியைப் பொறுத்தவரைத் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இடைநிற்றல் ஜீரோவாக இருக்கிறது.

குறைவு:
அதேபோல இடைநிலை அதாவது 9,10ம் வகுப்புகளில் இடைநிற்றல் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் இடைநிற்றல் விகிதம் 7.68ஆக இருக்கிறது. கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுடன் உயர்கல்வியில் இடைநிற்றல் மிகக் குறைவாக இருக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது.
மேலும், பாலின அடிப்படையில் இடைநிற்றல் குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளது. அதில் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் இடைநிற்றல் என்பது மாணவர்களிடையே தான் அதிகமாக இருக்கிறது. மாணவர்கள் இடைநிற்றல் 10.8ஆக இருப்பதாகவும் மாணவிகளின் இடைநிற்றல் 4.4ஆக இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு vs மத்திய அரசு
தமிழ்நாட்டில் இப்போது 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் முறை இருக்கிறது. இடைநிற்றல் ஜீரோவாக இருக்க இதுவும் முக்கிய காரணமாக இருக்கிறது. இதற்கிடையே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மத்திய அரசு சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியானது. அதில் இனி 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் முறை கிடையாது என்றும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் அவர்களுக்கு உடனடியாக 2 மாதங்களில் துணைத் தேர்வு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இருப்பினும், இது இடைநிற்றலை அதிகரிக்கும் என ஒரு தரப்பினர் கவலை தெரிவித்தனர். இதற்கிடையே தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் ஆல் பாஸ் முறை தொடரும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications