புதிய கல்வி கொள்கையை ஏற்காததால் தமிழகம் ரூ.5000 கோடியை இழக்கிறது! மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
டெல்லி: புதிய கல்வி கொள்கையைத் தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தாததால் தமிழக அரசுக்கு ரூ.5000 கோடி இழப்பு ஏற்படுவதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மேலும், புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதாகவும் அதில் அரசியல் கடந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்று தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இது தொடர்பாகத் தமிழக அரசு நேற்றைய தினம் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

தர்மேந்திர பிரதான்
இந்தச் சூழலில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் எழுதியுள்ளார். மேலும், இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தாததால் தமிழக அரசுக்கு ரூ.5000 கோடி இழப்பு ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "1968க்கு பிறகு அமைந்த அனைத்து அரசுகளும் மும்மொழி கொள்கையை அமல்படுத்தியுள்ளன. தமிழகத்தின் நிலை எனக்குத் தெரியும், அதை மதிக்கிறேன். ஆனால் நாம் அந்நிய மொழியை நம்பி இருக்கக்கூடாது.. அந்நிய மொழியை அதிகம் சார்ந்திருப்பது எதற்கும் தீர்வாகாது.
வாய்ப்பை இழக்கிறார்கள்
தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தாமல் இருப்பதால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்குக் கிடைக்க வேண்டிய சர்வதேச மற்றும் இந்திய அளவிலான வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கொள்கையை நிராகரிப்பது பிற்போக்குத்தனமானது.
கல்வியை அரசியலாக்கக் கூடாது. தவறாகச் சித்தரிக்கப்பட்ட உண்மை எந்த பிரச்சினையையும் தீர்க்கப்போவதில்லை... சொல்லப்போனால் பல பாஜக அல்லாத மாநிலங்களும் இதை ஏற்றுக்கொண்டு, அமல்படுத்துகின்றன. மத்திய அரசுடன் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளன.
ரூ.5000 கோடி
சமக்ரா ஷிக்ஷா, PM SHRI பள்ளிகள் ஆகியவை புதிய கல்விக் கொள்கையுடன் இணைக்கப்பட்டுள்ளன. புதிய கல்வி கொள்கையை ஏற்க மறுப்பதால் தமிழக அரசு 2500 கோடி ரூபாயை மட்டுமில்லை.. ரூ.5000 கோடியை இழக்கிறது. PM SHRI பள்ளிகள் என்பது அறிவியல் பூர்வமாகக் கல்வி கற்பிப்பது தாய்மொழியான தமிழில் கல்வி கற்பிப்பது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். ஏனென்றால், 8ம் வகுப்பு வரை மாணவர்கள் தாய் மொழியில் கல்வி கற்பதை புதிய கல்வி கொள்கை ஊக்குவிக்கிறது.
நான் மீண்டும் சொல்கிறேன் எந்தவொரு மாநிலத்திலும் எந்தவொரு மாணவர்கள் மீதும் எந்தவொரு மொழியையும் புதிய கல்வி கொள்கை திணிக்காது. எந்த மொழியைப் படிப்பது என்பது மாணவர்களின் விருப்பம். புதிய கல்விக் கொள்கை மொழியைத் திணிக்கும் என்று சொல்வது சரியானது இல்லை. எனவே, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் உயர்ந்து, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் உரிய முடிவெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
உறுதியாக இருக்கிறோம்
மத்திய அரசு புதிய கொள்கையை நாடு முழுக்க அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. நமது பிரதமர் மோடி தமிழ் மொழி இலக்கியம் பாரம்பரியம் மீது பெருமை கொள்கிறார். இந்தாண்டும் காசியில் தமிழ் சங்கமம் கொண்டாடப்பட உள்ளது. எனவே, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து மாணவர்கள் நலன் கருதி முடிவெடுக்குமாறு நான் மீண்டும் தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications