லோக்சபாவை தெறிக்கவிட்ட தமிழக எம்பிக்கள்! நீட் தேர்வு, காவிரி நீரை முன்வைத்தும் முழக்கம்!
டெல்லி: லோக்சபாவில் தமிழ்நாட்டின் 39 எம்பிக்களும் இன்று பதவியேற்றனர். தமிழக எம்பிக்கள் பதவியேற்கும் போது பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். நீட் தேர்வுக்கு எதிராக திமுக எம்பி தயாநிதி மாறனும் காவிரி நீரை திறக்க வேண்டும் என திமுக எம்பி முரசொலியும் முழக்கமிட்டனர்.
18-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடரில் முதலில் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மகதாப் நியமிக்கப்பட்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து முற்பகல் 11 மணிக்கு தேசிய கீதம் இசைக்கப்பட்டு லோக்சபா கூட்டம் தொடங்கியது.

மோடிக்கு எதிர்ப்பு: முதலில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடி முதலில் எம்பியாக பதவியேற்றார். அப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் கைகளில் அரசியல் சாசனப் புத்தகத்தை உயர்த்திப் பிடித்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.
முதல் நாளிலேயே சலசலப்பு: இதனையடுத்து தற்காலிக துணை சபாநாயகர்களாக கொடிக்குன்னில் சுரேஷ், டிஆர்பாலு, சுதிப் பந்தோபாத்யாய் ஆகிய இந்தியா கூட்டணி எம்பிக்களை பதவியேற்க அழைத்தார் தற்காலிக சபாநாயகர். ஆனால் இதனை ஏற்க மறுத்தனர் இந்தியா கூட்டணி எம்பிக்கள். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
280 எம்பிக்கள் பதவியேற்றனர்: இதனையடுத்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் ஏம்பிகளாக பதவியேற்றனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எம்பியாக பதவியேற்ற போது, நீட் தேர்வு முறைகேடுகளை முன்வைத்து எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முதல் நாளில் மொத்தம் 280 எம்பிக்கள் நேற்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். எம்பிக்கள் கடவுளின் பெயராலும் மனசாட்சியின் பெயராலும் ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் தாய்மொழிகளில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
தமிழக எம்பிக்கள் பதவியேற்பு: லோக்சபாவில் 2-வது நாளாக இன்று தமிழகம் உட்பட இதர மாநில எம்பிக்கள் பதவியேற்றனர். கடந்த முறை லோக்சபாவில் தமிழக எம்பிக்கள் பதவியேற்ற போது, பெரியார் வாழ்க- தமிழ் வாழ்க என முழங்கினர். இதற்கு ஜெய் ஶ்ரீராம், பாரத் மாதா கீ ஜே என பதில் முழக்கம் எழுப்பியது பாஜக தரப்பு. இன்று பதவியேற்கும் போதும் தமிழக எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர்.
திமுகவின் பெரும்பாலான எம்பிக்கள் பெரியார்- அண்ணா- கருணாநிதி- ஸ்டாலின் - உதயநிதி வாழ்க என முழக்கமிட்டனர். திமுகவின் சீனியர் எம்பிக்களான டிஆர் பாலு, ஆ.ராசா, கனிமொழி முழக்கங்கள் எதனையும் எழுப்பவில்லை. திமுகவின் சிஎன் அண்ணாதுரை, தரணிவேந்தன் ஆகியோர் அமைச்சர் எ.வ.வேலு பெயரையும் சேர்த்து வாழ்க என்றனர். தென்காசி எம்பி ராணி ஶ்ரீகுமார் கனிமொழி எம்பி, அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் பெயரையும் குறிப்பிட்டு வாழ்க என முழக்கமிட்டார்.
விசிக எம்பி ரவிக்குமார் வாழ்க தமிழ்! வாழ்க அம்பேத்கர்! வாழ்க பெரியார்! வாழ்க எழுச்சித் தமிழர்! சமத்துவம்- சமூகநீதி வெல்க என முழக்கமிட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஜெய் டெமாக்கரசி! ஜெய் கான்ஸ்டிடியூசன் என முழங்கினார்.தீரன் சின்னமலை காளியங்கராயன் ஆசியோடு என நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் உறுதி மொழியை வாசித்தார். பின்னர் கோவை செழியன்- கரூர் முத்துகவுண்டர் புகழ் - ஈஸ்வரன் ஆகியோரை வாழ்த்தி முழக்கமிட்டார். திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வன் முழக்கம் எதனையும் எழுப்பவில்லை. ஆனால் சட்டைப் பையில் இருந்த முதல்வர் ஸ்டாலின் படத்தை எடுத்து காட்டினார்.












Click it and Unblock the Notifications