தமிழக நீட் விலக்கு மசோதா மத்திய அரசுக்கு இன்னும் கிடைக்கவில்லை! மத்திய அமைச்சர் பரபரப்பு தகவல்
டெல்லி: தமிழகத்தின் நீட் விலக்கு மசோதா இன்னும் மத்திய அரசுக்கு கிடைக்கவில்லை என மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறினார்.
தேசிய அளவில் பொது மருத்துவம், பல்மருத்துவம் பயில நீட் (NEET)தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.
இந்த நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது. அரசு பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டுகள் உள்ளன.

நீட் விலக்கு மசோதா
இதனால் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என திமுக தொடர்ந்து வருகிறது. சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போதும் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று கொடுக்கப்படும் என திமுக கூறியது. அதன்படி ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சட்டசபையில் நீட் விலக்கு மசோதா 2021 செப்டம்பர் மாதம் 13ம் தேதி நிறைவேற்றப்பட்டது.

ஆளுநர் மறுப்பு
இது கவர்னர் ஆர்என் ரவி மூலம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்ப வேண்டும். இதனால் மசோதா ஆளுநர் ஆர்என் ரவிக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவை அவர் 142 நாட்கள் கழித்து திருப்பி அனுப்பினார். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இது கிடப்பில் உள்ளது.

மக்களவையில் கேள்வி
இதையடுத்து சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின், ஆளுனர் ரவியை சந்தித்தார். நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பும்படி கோரிக்கை வைத்தார். இந்நிலையில் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா தமிழக அரசு சார்பில் ஆளுநருக்கு அனுப்பபட்டது. இந்த மசோதாவின் தற்போதைய நிலை என்ன என திமுகவின் மூத்த எம்பி ஆ ராஜா மக்களவையில் கேள்வி எழுப்பி இருந்தார்.

மத்திய அரசுக்கு கிடைக்கவில்லை
இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்து பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், ‛‛தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு கோரும் மசோதா இன்னும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வந்து சேரவில்லை. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறையிடம் கேள்வி கேட்டப்பட்டது. தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கேட்டு பதில் அளித்துள்ளேன்'' என அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications