தமிழர் திராவிடர் அல்ல.. சிலப்பதிகாரம் தெரியும்! மாபொசியை கூறி கனிமொழியை தாக்கிய நிர்மலா சீதாராமன்
டெல்லி: நாடாளுமன்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நேற்று பேசிய கனிமொழி பிரதமர் மோடியை சிலப்பதிகாரம் படிக்க சொன்னார். அதற்கு இன்று நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்தார். அப்போது அவர் மாபொசியின் குறிப்பை சுட்டிக்காட்டி, ‛‛தமிழர் திராவிடர் அல்ல. தமிழ்நாட்டில் அந்தணர் ஆரியர் அல்லர் தமிழர்'' எனவும், சிலப்பதிகாரம் தெரியும் என்றும் கூறி பதிலடி கொடுத்தார்.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை பேச வைக்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2வது நாள் விவாதம் நடந்தது.

இந்த விவாதத்தில் திமுக எம்பி கனிமொழி பேசினார். அப்போது அவர் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இதுபற்றி கனிமொழி எம்பி பேசியதாவது:
‛‛தமிழகத்தின் வரலாறு பிரதமர் மோடிக்கு தெரியுமா? நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்து அது சோழர் பரம்பரையில் இருந்து வந்ததாக சொன்னீர்கள். கண்ணகியின் கோபத்தால் பாண்டியனின் செங்கோல் தகர்ந்த கதை உங்களுக்கு தெரியுமா? எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தை படியுங்கள். ஏனென்றால் அதில் உங்களுக்கான பாடம் நிறைய உள்ளது'' என தெரிவித்து இருந்தார்.
கனிமொழி எம்பியின் இந்த பேச்சுக்கு இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியபோது பதிலடி கொடுத்தார். அப்போது நிர்மலா சீதாராமன் பேசும்போது, ‛‛சிலப்பதிகாரம் பற்றி நான் கூறுகிறேன். மயிலை பொன்னுசாமி சிவஞானம். சிலம்பு செல்வர் என்ற பெயர் கொண்டவர். சிலப்பதிகாரத்துக்கான அத்தாரிட்டியே அவர் தான். சிலப்பதிகாரம் படிக்க வேண்டும் என கனிமொழி கூறியாதால் நான் இதை சொல்கிறேன்.
மாபொசி கடந்த 1951ல் தமிழ் முரசில் ஒரு குறிப்பை எழுதியுள்ளார். சிலப்பதிகாரம் நாம் திராவிடர் அல்லர். தமிழர். நமது தாயகத்தின் பெயர் திராவிடம் அன்று தமிழகம். அதன் வடக்கு எல்லை விந்தியம் அன்று வேங்கடம். தமிழ்நாட்டில் அந்தணர் ஆரியர் அல்லர் தமிழர். தமிழருடைய பண்பாடும், பழக்க வழக்கங்களுக்கும் பெரும்பாலும் வேங்கடத்துக்கு வெளியே உள்ளவர்களின் பண்பாடு, பழக்க வழக்கங்களுக்கும், வேறானவை ஆயினும் விரோதமானது அல்ல என்று சிலப்பதிகாரம் கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
‛ஒரே பாரதம் உன்னத பாரதம்' மூலம் சிலப்பதிகாரம் குறித்து மாபொசி சொன்னதை தான் பிரதமர் மோடி செயல்படுத்தி உள்ளார். இது தமிழ்நாட்டில் அனைவருக்கும் புரியும். இருப்பினும் நாங்கள் அரசியல் செய்ய விரும்புகிறோம். உண்மையை சொல்ல விரும்பவில்லை. அதாவது பல மொழிகள் இருப்பினும் வேறுபாடு இல்லை. ஒரே நாடு என்பதை தான் பிரதமர் மோடி கூறுகிறார். பிரதமர் மோடியும் சிலப்பதிகாரம் படிக்கிறார்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications