நேற்று பிரதமருடன் மீட்.. மறுநாளே பாதுகாப்பு துறை அமைச்சரை சந்தித்த தமிழ்நாடு ஆளுநர்.. என்ன காரணம்?
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி இன்று டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி தற்போது 6 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்த டெல்லி பயணத்தில் ஆளுநர் ஆர். என் ரவி பல்வேறு முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளார்.
நேற்று முதல்நாள் மாலை டெல்லி சென்றவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார். சுமார் 20 நிமிடங்கள் இவர்கள் இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்தனர்.

பாதுகாப்பு
தமிழ்நாடு அரசியல், எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட சில விஷயங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. முக்கியமாக தமிழ்நாட்டில் திமுக எம்பிக்களுக்கு எதிரான வழக்குகள் குறித்தும், சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் புகார் அளித்து இருந்தார். திமுக எம்பி ரமேஷுக்கு எதிரான கொலை வழக்கு, எம்பி ஞானதிரவியத்திற்கு எதிரான தாக்குதல் வழக்கு குறித்து அண்ணாமலை ஆளுநரிடம் புகார் அளித்து இருந்தார்.

புகார்
அதேபோல் தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஊரக உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டதாக ஆளுனரிடம் புகார் அளித்து இருந்தார். எதிர்க்கட்சிகளின் இந்த புகார்கள் குறித்து ஆளுநர் பிரதமர் மோடியிடம் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தொடர்பான மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ஆளுநரிடம் வலியுறுத்தி இருந்தார்.

சந்திப்பு
இதை பற்றியும் ஆளுநர் ஆர். என் ரவி பிரதமர் மோடியிடம் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. நேற்று இந்த சந்திப்பை தொடர்ந்து ஆளுநர் ஆர். என் ரவி இன்று டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். தமிழ்நாடு சட்ட ஒழுங்கு, எல்லை பாதுகாப்பு, இலங்கை கடலோர பாதுகாப்பு, கேரள எல்லையில் நக்சல்களின் எழுச்சி, இந்திய பெருங்கடலில் நிலவும் பிரச்சனைகள் குறித்து இவர் பாதுகாப்பு துறை அமைச்சரிடம் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. ஆர்.என் ரவி முன்னாள் உளவுத்துறை அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்நாத் சிங்
இலங்கையில் சீனா தொடர்ந்து ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முதலீடு செய்து வருகிறது. இது தென்னிந்தியாவிற்கு பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாகவே இலங்கையுடன் உறவை வலுப்படுத்தும் விதமாக சில நாட்களுக்கு முன் இந்திய ராணுவ தளபதி நரவனே இலங்கை சென்றார். இந்த நிலையில் ஆளுநர் ஆர். என் ரவி - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இடையிலான சந்திப்பில் எல்லை பாதுகாப்பு குறித்து பேசப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications