"பாரம்பரியத்தை காக்க.." ஜல்லிக்கட்டு வழக்கு! சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சொன்ன முக்கிய பாயிண்ட்
டெல்லி: ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் தமிழக அரசு தனது எழுத்துப்பூர்வமா வாதத்தைத் தாக்கல் செய்துள்ளது.
காட்சி விலங்குகள் பட்டியலில் மத்திய அரசு கடந்த 2011ஆம் ஆண்டு சிங்கம், புலி, சிறுத்தை, உள்ளிட்ட விலங்குகளுடன் காளைகளும் சேர்த்து. இதனால் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முடியாமல் போனது. சில ஆண்டுகள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாமலும் இருந்தது.
மிருக வதை தடுப்பு சட்டத்தைச் சுட்டிக்காட்டி ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்துக் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை மெரினாவில் மிகப் பெரிய அளவில் இளைஞர்கள் போராட்டம் நடைபெற்றது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
இதையடுத்து தமிழக அரசு ஜல்லிக்கட்டை நடத்த அவசர சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. அதன் பின்னரே சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இந்தச் சூழலில் அவசரச் சட்டத்திற்குத் தடை கோரியும் ஜல்லிக்கட்டிற்குத் தடை விதிக்க கோரியும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் மீண்டும் சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடர்ந்தன. ஜல்லிக்கட்டு, மகாராஷ்டிராவில் நடக்கும் கம்பாலா உள்ளிட்ட போட்டிகளுக்கு இவர்கள் தடை கோரியிருந்தனர். நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

தமிழக அரசு வாதம்
கடந்த 8ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பான அனைத்து வாதங்களும் நிறைவடைந்தன. இதையடுத்து இந்த வழக்கில் மனுதாரர்கள் அனைவரும் ஒரு வாரத்திற்குள் எழுத்துப்பூர்வமான வாதத்தை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்த வழக்கில் இதுவரை தமிழக அரசு தொடர்ந்து மிகச் சிறப்பான வாதங்களையே முன்வைத்து வருகிறது. இதற்கிடையே இன்று இந்த வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வ வாதத்தைத் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

காளைகளைத் துன்புறுத்துவதில்லை
அதில் ஜல்லிக்கட்டிற்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. விவசாயத்தோடு ஜல்லிக்கட்டு ஒன்றிப்போனது என்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் எந்தவொரு காளைகளும் துன்புறுத்தப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் பொழுதுபோக்கிற்காக நடத்தப்படும் விளையாட்டு இல்லை என்று தெரிவித்த தமிழக அரசு, காளைகளைப் பெருமைப்படுத்தி, கவுரவிக்கும் வகையிலேயே இந்த விளையாட்டு நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. இதில் காளைகளின் நல்வாழ்வை உறுதி செய்ய அனைத்து வழிமுறைகளும் கடைப்பிடிக்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் சாசனத்துக்கு உட்பட்டது
மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பாகத் தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டது என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையிலும் நாட்டுக் காளைகளைப் பாதுகாக்கவுமே இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதாகவும் தமிழக அரசு தனது எழுத்துப்பூர்வ வாதத்தில் கூறியுள்ளது.

விதிமீறல் இல்லை
குறிப்பாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் எந்தவொரு விதிமீறலும் இல்லை என்றும் தமிழக அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது. தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டை நடத்த முறையான விதிமுறைகளை வகுத்துள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் மேற்பார்வையில் தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகளால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்குப் பின்னரே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

காளைகள் பாதுகாப்பு
மேலும், ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படும் காளைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்றும் காளைகள் துன்புறுத்தப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் காளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவே சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு உரிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதால், தடை கோரும் அமைப்புகளின் வாதங்களை ஏற்கக் கூடாது என்றும் தமிழக அரசு தனது வாத்தில் கூறியுள்ளது. மேலும், காலம் காலமாக நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டைத் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications