மொத்தமாக மாறுது டாஸ்மாக்.. தீபாவளிக்கு பின் மேஜர் மாற்றம்! இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
டெல்லி: டாஸ்மாக் கடைகளில் வாங்கப்படும் மது பாட்டில்களுக்கு பில் வழங்கப்படுவது இல்லை என்ற புகார் நீண்ட காலமாகவே இருந்து கொண்டு இருக்கிறது. இதற்கிடையே இந்த நீண்ட கால பிரச்சினைக்கு இப்போது ஒரு வழியாகத் தீர்வு கிடைத்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு வரும் தீபாவளி முதல் பில்கள் தரப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் மூலமாகவே மது விற்பனை செய்யப்படுவது அனைவருக்கும் தெரியும். ஆனால், டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுபானத்திற்கு பில் தரப்படுவதில்லை என்ற புகார் பல காலமாகவே இருந்து வருகிறது.

பில்லிங்: டாஸ்மாக் கடைகளில் பில் வழங்குவது குறித்து சில மாதங்களுக்கு முன்பு அரசு நடவடிக்கை எடுத்தாலும் பில் வழங்கிய பாடு இல்லை. இதற்கிடையே இந்த ஆண்டு தீபாவளிக்குப் பிறகு மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவோருக்கு பில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் டாஸ்மாக் கடைகளில் கம்ப்யூட்டர் பில் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
பில்லிங் போட ஏதுவாக டிராபிகல் ப்ரூவரீஸ் மற்றும் யுனைடெட் ப்ரூவரிஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஏற்கனவே தனித்துவமான பார்கோடுகளை கொண்ட மது பாட்டில்களை டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பத் தொடங்கிவிட்டன. மற்ற டாஸ்மாக் சப்ளையர்களும் இதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
நடவடிக்கை: தனித்தனி பாட்டில்கள் மட்டுமின்றி ஒவ்வொரு அட்டைப் பெட்டிகளிலும் தனித்தனி பார்கோட்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாட்டிலிங் தொழிற்சாலையில் இருந்து கன்வேயர் பெல்ட்டில் நகர்ந்து வெளியே செல்லும் போது அங்குள்ள ஸ்கேனர்கள் பார்கோடுகள் ஸ்கேன் செய்து டேட்டாவை சேகரிக்கும்.
இப்படி பாடிலிங் தொழிற்சாலை முதல் வாடிக்கையாளர்களுக்குச் சென்று சேரும் வரை எல்லாமே கணினிமயமாக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஒரு மது பாட்டில் எப்போது தயாரிக்கப்பட்டது, எப்போது அது பாடிலிங் தொழிற்சாலையில் இருந்து அனுப்பப்பட்டது, எந்த டாஸ்மாக் கடைக்கு எப்போது அனுப்பப்பட்டது, அதை எப்போது வாடிக்கையாளர் வாங்கினர் என்பது வரை எல்லாவற்றையும் கண்காணிக்க முடியும்.
மது விற்பனை: ஒவ்வொரு கடையிலும் எந்த வகையான மது அதிகம் விற்பனையாகிறது, போலி மது விற்பனையைத் தடுப்பு, பிற மாநில மது வகைகளைச் சட்டவிரோதமாக இங்கு விற்பதைத் தடுப்பது ஆகியவற்றுக்காகவே தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. பில் இல்லாததால் அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருப்பதாக வாடிக்கையாளர்கள் கூறி வரும் நிலையில், அதற்கு ஒரு தீர்வாகவும் இது இருக்கும்.
சாப்ட்வேர் ரெடி: ரயில்டெல் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த சாப்ட்வோர் இப்போது டாஸ்மாக் கடைகளில் சோதனை முறையில் டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "மற்ற மாநிலங்களில் விற்பனை மட்டுமே கணினிமயமாக்கல் செய்துள்ளனர். ஆனால், நாம் இப்போது டாஸ்மாக்கின் நிதி, மேலாண்மை நடவடிக்கை, மொத்த விற்பனை, சில்லறை விற்பனை என அனைத்தையும் நெட்வோர்க்கில் கொண்டு வந்துள்ளோம்.
இப்போது சோதனை முறையில் சில இடங்களில் டெஸ்ட் செய்து வருகிறோம். இதில் இருக்கும் குறைகளைக் கண்டறிந்து அதை நீக்குவோம். பிறகு இதை அனைத்து கடைகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்த பில்லிங் பிராசஸை நடைமுறைப்படுத்த தேவையான கணினி உள்ளிட்ட பொருட்கள் ஏற்கனவே வாங்கப்பட்டுள்ளது" என்றார்.
டாஸ்மாக் நிறுவனம் காலி பாட்டில்களை திரும்ப வாங்கும் முறையை அமல்படுத்த உள்ள நிலையில், அதையும் கருத்தில் கொண்டே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications