“24 மணி நேரம் கெடு” தைரியம் இருந்தால் என்னை மோடி கைது பண்ணட்டும்! நேரடி சவால் விட்ட சந்திரசேகர ராவ்
டெல்லி : தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 15 லட்சம் டன் புழுங்கல் அரிசியை கொள்முதல் செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், மோடிக்கு தைரியம் இருந்தால், என்னை கைது செய்யட்டும் என ஆவேசமாகப் பேசினார்.
கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசையும் பிரதமர் நரேந்திர மோடியையும் தெலுங்கானா முதல்வர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் நடப்பு பயிர் பருவத்தில் புழுங்கல் அரிசியை வாங்க வேண்டும் என்ற தெலுங்கானாவின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது.

முதலர் சந்திரசேகர ராவ்
டிஆர்எஸ் அரசின் "நெல் கொள்முதலில் அரசியல்" செய்வது, இடைத்தரகர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதற்கும், விவசாயிகளின் கோபத்தை மத்திய அரசின் மீது திசை திருப்புவதற்கும் பெரிய அளவிலான சதி கேசிஆர் ஏற்படுத்துவதாக தெலுங்கானா மாநில பாஜக தலைவர் குமார் சனிக்கிழமை குற்றம் சாட்டினார். மேலும் தெலுங்கானாவின் நிலைப்பாட்டை மத்திய அரசும் எதிர்த்தது, மத்திய உணவு அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் தெலுங்கானா அரசு இந்திய உணவுக் கழகத்திற்கு புழுங்கல் அரிசியை வழங்காது என்று எழுத்துப்பூர்வமாக கூறியதாக தெரிவித்திருந்தார்.

டெல்லியில் போராட்டம்
இதனையடுத்து டிஆர்எஸ் கட்சி மத்திய அரசுக்கு எதிராக தனது எதிர்ப்பை தீவிரப்படுத்திய நிலையில் போராட்டமும் அறிவிக்கபட்டது. அறிவித்தது போலவே தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர்கள், திங்களன்று தேசிய தலைநகரான டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக ஒரு நாள் தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணாவை முன்னிட்டு, தெலுங்கானா பவன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 'ஒரே நாடு-ஒரே கொள்முதல் கொள்கை' மற்றும் 'விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்போம்' என்ற வாசகங்களுடன் டிஆர்எஸ் விளம்பரப் பலகைகள் மற்றும் சுவரொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தது.

24 மணி நேரம் கெடு
டிஆர்எஸ் கட்சியின் தலைவரான கேசிஆர், கடந்த 10 நாட்களாக மருத்துவப் பரிசோதனைக்காகவும், போராட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காகவும் டெல்லியில் தங்கியுள்ள நிலையில் அவரும் போராட்டத்தில் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் மிகவும் ஆவேசமாக பேசிய தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக விவசாயிகள் மீண்டும் போராட்டம் நடத்த தலைநகரில் தயாராக இருப்பதாகக் கூறினார். "மோடிக்கு தைரியம் இருந்தால், என்னை கைது செய்யட்டும்... கைகூப்பியபடி, பிரதமர் மற்றும் மத்திய உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் சொல்கிறேன். தயவு செய்து எங்கள் உணவு தானியங்களை வாங்கிக் கொடுங்கள். 24 மணி நேரம் அவகாசம் தருகிறேன் என்றார்.

பிச்சைக்காரர்கள் அல்ல
"முடிவு எடுக்காவிட்டால் அதன்பிறகு, நாங்கள் எங்களுடைய முடிவை எடுத்துக் கொள்வோம் " "தெலுங்கானா அதன் உரிமையை தான் கேட்கிறது. புதிய விவசாயக் கொள்கையை உருவாக்க பிரதமரிடம் நான் பேச விரும்புகிறேன், அதற்கு நாங்களும் பங்களிப்போம். நீங்கள் அதைச் செய்யாவிட்டால், நீங்கள் அகற்றப்படுவீர்கள், புதிய அரசாங்கம் புதிய விவசாயக் கொள்கையை உருவாக்கும், "அரசாங்கத்தை கவிழ்க்கும் வல்லமை கொண்ட விவசாயிகளின் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள். விவசாயிகள் பிச்சைக்காரர்கள் அல்ல" என்றும் மிக ஆவேசமாக கேசிஆர் பேசினார்.












Click it and Unblock the Notifications