நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க மோடி தலைமையில் கேபினட்அமைச்சரவை குழு அமைப்பு
டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றுக்காக பிரதமர் மோடி இரு கேபினட் அமைச்சரவை குழுக்களை அமைத்துள்ளார்.
தொழில் முதலீடு,பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றிற்கு தேவையான திட்டங்களை ஆராயவும், தயாரித்து செயல்படுத்தவும் தனது தலைமையில் இரு அமைச்சரவை குழுக்களை அமைத்துள்ளார் பிரதமர்.

கடந்த 2018-19ம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 5.8 சதவீதமாக சரிந்தது. கடந்த நிதியாண்டின் ஒட்டுமொத்த ஜிடிபி 6.8 சதவீதம் ஆகும். ஆனால் 7.2 சதவீதம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதே போல நாட்டில் நிலவி வரும் வேலைவாய்ப்பின்மையை பொறுத்தவரை, ஜூலை 2017 - ஜூலை 2018 காலக்கட்டத்தில், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு 6.1 சதவீதம் உயர்ந்து அதிர வைத்தது.
எனவே உள்நாட்டு மொத்த உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு இவை இரண்டும் பிரதமர் மோடிக்கு கடுமையான சவாலாகவே உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி தனது தலைமையில் இந்த இரண்டு புதிய அமைச்சரவைக் குழுவை அமைத்துள்ளார்.
முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சி தொடர்பான குழுவில் பிரதமர் மோடி உட்பட 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இது தவிர வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு தொடர்பாக 10 பேர் கொண்ட மற்றொரு குழுவையும் அமைத்து மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் பிரதமர் மோடி உட்பட 10 பேர் உள்ளனர் இக்குழுவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
வேலைவாய்ப்பில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம், புதிய வேலைவாய்ப்பை உருவாக்குதல், வேலைவாய்ப்பை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளுக்காக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த குழுவில் இவர்கள் தவிர பிரதமர் அமைத்துள்ள வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு குழுவில் மத்திய அமைச்சர்கள் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே, தொழிலாளர் நலத் துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோரும் உள்ளனர்.
இதற்கு முன்னர் பாதுகாப்பு, பொருளாதார விவகாரங்கள், நியமனம், நாடாளுமன்ற விவகாரங்கள், அரசியல் விவகாரங்கள் ஆகியவற்றுக்கு கேபினட் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications