புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்.. இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
டெல்லி: காலியாக உள்ள இரண்டு தேர்தல் ஆணையர் இடங்களை புதிய சட்டங்களை கொண்டு மத்திய அரசு நிரப்பிவிட்ட நிலையில், அதற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனினும் வழக்கை மார்ச் 21ம் தேதி விசாரிப்பதாக அறிவித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை உறுப்பினர்களாக கொண்டது. இதில் தேர்தல் ஆணையராக இருந்த அனுப் சந்திர பாண்டே கடந்த மாதம் ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் ஆணையரான அருண் கோயல் கடந்த 9-ந் தேதி திடீரென ராஜினாமா செய்தார். இதனால் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் மட்டுமே தேர்தல் கமிஷனில் பதவியில் இருந்து வந்தார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காலியாக இருக்கும் தேர்தல் ஆணையர் பதவிகளை நிரப்ப வேண்டியது அவசியம் என்கிற நிலை ஏற்பட்டது.
இதையடுத்து மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டப்படி, தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் பிரதமர் தலைமையிலான குழு 14-ம் தேதி கூடி புதிய தேர்தல் கமிஷனர்களை தேர்வு செய்யும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக புதிய தேர்தல் கமிஷனர் பதவிக்காக 212 பேர் கொண்ட பட்டியலை சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் தலைமையிலான தேர்வுக்குழு தயாரித்திருந்தது. இதில் உட்பல் குமார் சிங், பிரதீப் குமார் திரிபாதி, ஞானேஷ் குமார், இந்தேவர் பாண்டே, சுக்பிர் சிங் சாந்து, சுதிர் குமார் கங்காதர் ரகாட்டே ஆகிய 6 பேர் இறுதி செய்யப்பட்டு இருந்தது.
முன்னதாக தேர்தல் ஆணையர்களை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரை கொண்ட உயர்மட்டக்குழு தேர்வு செய்யும். ஆனால் மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த சட்டப்படி, இந்த குழுவில் பிரதமர், மத்திய அமைச்சர் ஒருவர் மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோரை உறுப்பினராக நியமித்தது மத்திய அரசு .
இந்த புதிய சட்டப்படி உருவாக்கப்பட்ட தேர்வுக்குழு முதல் முறையாக நேற்று கூடியது. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, லோக்சபா காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரை கொண்ட குழு நேற்று கூடினார்கள்.. இதில் தேர்வுக்குழு தலைவரான மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வாலும் கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சாந்து ஆகிய இருவரையும் புதிய தேர்தல் ஆணையர்களாக தேர்வுக்குழுவினர் தேர்வு செய்தனர். பின்னர் இருவரையும் தேர்தல் ஆணையர்களாக நியமிக்குமாறு மத்திய அரசு பரிந்துரைத்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதை பரிசீலித்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சந்து ஆகிய இருவரையும் புதிய தேர்தல் ஆணையர்களாக முறைப்படி நியமனம் செய்தார்.
இதனிடையே புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. தேர்வுக்குழு கூட்டத்திலேயே ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இதுபற்றி அவர் கூறும் போது, 2 தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்காக எனக்கு நேற்று முன்தினம் அழைப்பு வந்தது. இதற்காக 212 பேர் கொண்ட பட்டியல் நேற்று முன்தினம் இரவு தான் தரப்பட்டது. இதில் மிகவும் தகுதி வாய்ந்த நபரை ஒரே இரவில் தேர்வு செய்வது எப்படி சாத்தியம்? பின்னர் தேர்வுக்குழுவினர் தேர்வு செய்த 6 பேர் பட்டியலை கூட்டத்துக்கு 10 நிமிடங்களுக்கு முன்புதான் எனக்கு தந்தார்கள். இந்த 6 பேர் பட்டியலில் இருந்து ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சந்து ஆகியோரை தேர்வு செய்திருக்கிறார்கள். அவர்களை பற்றி எந்த விவரமும் எனக்கு தெரியாது என்றார்.
தான் ஒரு சம்பிரதாயமாக மட்டுமே அழைக்கப்பட்டதாகவும்,, அவர்களின் நியமனமும் ஒரு சம்பிரதாயம்தான் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இருந்திருந்தால் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும் என்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.
இதனிடையே காலியாக உள்ள தேர்தல் ஆணையர்கள் இடங்களை புதிய சட்டங்களை கொண்டு நிரப்ப தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயா தாகூர் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அண்மையில் இயற்றப்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (சேவை நிபந்தனைகள் மற்றும் அலுவலக விதிமுறைகள்) சட்டம், 2023ன் கீழ் புதிய தேர்தல் ஆணையரை நியமிக்க மத்திய அரசுக்குத் தடை விதிக்க வேண்டும் என ஜெயா தாகூர் தனது மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் தேர்தல் ஆணையர்கள் புதிய சட்டப்படி நியமிக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மார்ச் 21ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications