உக்கிரமடைந்த விவசாயிகள்! 5வது முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு! அலர்ட் மோடில் டெல்லி
டெல்லி: பல ஆண்டு கோரிக்கைகளை முன்வைத்து, விவசாயிகள் மீண்டும் டெல்லி நோக்கி பேரணியை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் விவசாயிகளை 5ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைத்திருக்கிறது.
நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்று சொல்லப்பட்டாலும், கடந்த பல ஆண்டுகளாகவே விவசாயிகளின் முதுகெலும்பு இன்னும் நிமிரவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. குறிப்பாக பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை உறுதி செய்யும் வகையில் கடந்த 2020ம் ஆண்டு மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது.

ஆனால், இந்த சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் இருந்து அனைத்து விவசாயிகளும் டெல்லியில் ஒன்று சேர்ந்து பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். தொடர் போராட்டம் காரணமாக இந்த சட்டங்கள் மத்திய அரசால் வாபஸ் பெறப்பட்டன. இந்நிலையில், தங்களின் நீண்ட கால கோரிக்கையான 'விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை(MSP)' சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று விவசாயிகள் மீண்டும் டெல்லி நோக்கி அணி திரண்டுள்ளனர்.
விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும், 2021 லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013ஐ மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், மற்றும் 2020-21ல் முந்தைய போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் விவசாயிகள் எழுப்பியுள்ளனர்.
இவர்கள் டெல்லி நோக்கி வருவதை தடுக்க முள் வேலிகள், சிமெண்ட் தடுப்புகள், தரையில் ஆணிகளை பதித்து வைத்தல் என பல்வேறு தடைகளை காவல்துறையும், துணை ராணுவமும் ஏற்படுத்தி வருகிறது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து டெல்லியை இணைக்கும் அனைத்து சாலைகளிலும் இந்த தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
இருப்பினும் இந்த தடைகளை தாண்டி விவசாயிகள் டெல்லி நோக்கி அணிவகுத்து வருகின்றனர். இதனை தடுக்க ஏற்கெனவே, மத்திய அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இப்படியாக 4 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் தற்போது 5ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா இந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால், விவசாய சங்கங்கள் இதனை, "நேரம் கடத்தும் செயல். அதனால்தான் எங்களை மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள்" என்று விமர்சித்துள்ளன. நாடாளுமன்றத்தை கூட்டி குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு அவை நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications