போராட அனுமதியுங்கள்! மத்திய, மாநில அரசுக்கு உத்தரவு போட வேண்டும்..உச்சநீதிமன்றத்தை நாடிய விவசாயிகள்
டெல்லி: போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அவர்களை போராட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த 2020ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் டெல்லி நோக்கி படையெடுத்து வந்து, போராட்டத்தை தொடங்கினர். தொடர் போராட்டம் காரணமாக மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றுக்கொண்டது. இந்நிலையில், இதேபோன்ற போராட்டத்தை விவசாயிகள் மீண்டும் தொடங்கியுள்ளனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து டெல்லி நோக்கி அவர்கள் அணி வகுக்க தொடங்கியுள்ளனர்.

விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும், விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும். சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும், 2021 லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013ஐ மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், மற்றும் 2020-21ல் முந்தைய போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த போராட்டங்கள் தங்களின் வாக்கு வங்கிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மத்திய அரசு உணர்ந்திருக்கிறது. எனவே, பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்திருக்கிறது. மூன்று அமைச்சர்கள் கொண்ட குழு இந்த பேச்சுவார்ததையை நடத்தி வருகிறது. இதுவரை 4 சுற்று பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்த நிலையில், 5ம் சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
ஆனால், தொடர் பேச்சுவார்த்தை மூலம் மத்திய அரசு காலத்தை வீணடிப்பதாக விவசா சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. நாடாளுமன்றத்தின் அவையை உடனே கூட்டி, அதில் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல தங்களை டெல்லிக்குள் நுழைய விடாமல் ஹரியான போலீஸ் கடுமையான தாக்குதலை நடத்தி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அவர்களை போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
சீக்கிய சேம்பர் ஆஃப் காமர்ஸின் நிர்வாக இயக்குநராக இருக்கும் அக்னோஸ் தியோஸ் என்பவர்தான் இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அதில், போராடும் விவசாயிகள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், டெல்லியில் விவசாயிகள் பேரணி போராட்டம் நடத்த அனுமதியளிக்க வேண்டும், அதேபோல போராடும் விவசாயிகள், சீக்கியர்கள் மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications