ராகுல் காந்தி ஷேர் செய்த போட்டோவால் நெருக்கடியில் பேஸ்புக்..விளக்கம் தர குழந்தைகள் ஆணையம் நோட்டீஸ்
டெல்லி: டெல்லியில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பகிர்ந்தது பற்றி விளக்கம் கேட்டு ஃபேஸ்புக் அதிகாரிகளுக்கு தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

ராகுல்காந்தியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பேஸ்புக் நிறுவனத்திற்கு ஏற்கனவே குழந்தைகள் நல கமிஷன் பரிந்துரை செய்தது. இதுவரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன் என்று கேள்வி எழுப்பி, தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.
இதே மாதிரி புகைப்படத்தை வெளியிட்டதற்காகத்தான் ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கி வைத்திருந்தது. அது மீண்டும் தற்போதுதான் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன் பரிந்துரையின் பெயரில் டுவிட்டர் இந்த நடவடிக்கை எடுத்தது. ஆனால், இந்திய அரசியல் செயல்பாடுகளில் ட்விட்டர் தலையிடுவதாக ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவர் நீதி சட்டம், 2015, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு (POCSO) சட்டம், 2012, மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் விதிகளை ராகுல் காந்தி மீறிவிட்டார் என்பதால், இன்ஸ்டாகிராம் அக்கவுண்டுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவர் நீதி சட்டம், 2015 ன் பிரிவு 74, எந்த ஒரு ஊடகத்திலும் ஒரு குழந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்துவதை தடைசெய்கிறது மற்றும் போக்சோ சட்டம், 2012 இன் பிரிவு 23, ஒரு குழந்தையின் தகவல் அல்லது புகைப்படத்தை எந்த வடிவத்திலும் வெளியிடக்கூடாது என்றும் கூறுகிறது.
போக்சோ சட்டத்தின் பிரிவு 23 இன் கீழ் குழந்தையின் பெயர், முகவரி, புகைப்படம், குடும்ப விவரங்கள், பள்ளி, சுற்றுப்புறம் அல்லது குழந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்த வழிவகுக்கும் வேறு எந்த விவரங்களும் வெளியிடப்படக் கூடாது என்று, தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையம் பேஸ்புக்கிற்கு அனுப்பிய நோட்டீசில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications