டெல்லி செங்கோட்டையில் பட்டொளி வீசி பறக்கும் தேசியக்கொடி.. தமிழக விருந்தினர்கள் 45 பேர் பங்கேற்பு
டெல்லி: செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் உள்பட 45 பேர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளனர்.
டெல்லி செங்கோட்டையில் இன்றைய தினம் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழாவில் நாடு முழுவதும் இருந்து சுமார் 1800 சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். பிரதமர் மோடியின் உரையை கேட்க, செவிலியர்கள், விவசாயிகள் என 1,800 பேர் சிறப்பு விருந்தினர்களாக குடும்பத்துடன் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் மீனவர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், மத்திய விஸ்டா திட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், காதி துறை ஊழியர்கள், பிஎம்-கிஸான் திட்ட பயனாளிகள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை விவசாயிகள் 4 பேர், 2 கதர் கைவினைஞர்கள், 22 மீனவர்கள், ஊரக வளர்ச்சி துறையை சேர்ந்த 3 பேர், கல்வி துறையில் ஒருவர், பிரதமர் வேளாண்மை திட்டத்தில் 2 பேர் என 45 பேர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர். இதற்காக 45 பேரும் டெல்லி சென்றுள்ளனர்.
சுதந்திர தின விழா நடைபெறும் டெல்லி செங்கோட்டையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 26ஆம் தேதி முதலே செங்கோட்டை வளாகம் எஸ்பிஜி பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் ஆயிரக்கணக்கான அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பட்டங்கள், பலூன்கள், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ட்ரோன்களை கண்டறியும் அதிநவீன ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. செங்கோட்டை வளாகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications