குளிரில் வெறும் காலுடன் பணிபுரிந்த ஊழியர்கள்.. பார்த்ததும் இளகிய மோடி! 100 ஜோடி சணல் செருப்பு பரிசு
டெல்லி: காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தொழிலாளர்கள் கடும் குளிரில் வெறும் காலுடன் பணிபுரிவதை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு 100 ஜோடி சணல் செருப்புகளை பரிசாக வழங்கி உள்ளார்
பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொண்ட அவர், காசி விஸ்வநாதர் வழித்தடத்தை திறப்பதற்காக சென்றிருந்த போது, காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று வழிபாடுகளில் கலந்து கொண்டார்.

பிரதமர் வாரணாசி பயணம்
கோவில் வளாகத்தில் தோல் அல்லது ரப்பரால் செய்யப்பட்ட காலணிகளை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது, பூசாரிகள், சேவை செய்பவர்கள், பாதுகாவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் உட்பட யாருக்கும் இந்த ஆணையில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. இந்நிலையில் கோயிலுக்குச் சென்று இருந்த போது கடுமையான குளிரில் பெரும்பாலான பணியாளர்கள் தங்கள் கடமையை வெறும் காலுடன் செய்ததை, பிரதமர் மோடி கவனித்ததாக கூறப்படுகிறது.

தொழிலாளிகளுக்கு பரிசு
பிரதமர் மோடி தனது சுற்றுப்பயணத்தின்போது காசி விஸ்வநாதர் வழித்தடத்தை நிர்மாணித்த தொழிலாளர்கள் மீது மலர் இதழ்களை பொழிந்து மரியாதை செலுத்தியதோடு அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார். பல்வேறு வேலைகளுக்கிடையே தொழிலாளர்கள் குறித்து சிந்தனையில் இருந்த பிரதமர் மோடி ஆலயத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் அணிந்து கொள்ளும் வகையில் 100 ஜோடி சணலால் செய்யப்பட்ட காலணிகளை வாரணாசிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பணியாளர்கள் மகிழ்ச்சி
இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள பணியாளர்கள், ஒரு நாட்டின் பிரதமராக இருந்து கொண்டு பல்வேறு பணிகளுக்கு இடையேயும் தங்களை ஞாபகம் வைத்து காலணிகளை பரிசளித்து உள்ள பிரதமர், தனது வருகையின் போது தங்கள் கால்களை கவனித்து இருப்பார் என்று கனவில் கூட நினைத்தது கிடையாது எனவும், பிரதமரின் இந்த நுணுக்கமான அணுகுமுறை மற்றும் ஏழைகள் மீதான அக்கறைக்கு இது ஒரு மற்றொரு எடுத்துக்காட்டு என தொழிலாளர்கள் நெகிழ்ந்துள்ளனர்.

ட்ரெண்ட் செய்யும் பாஜகவினர்
கோவிலுக்குள் தோல் செருப்பு, ரப்பர் செருப்பு அணியக் கூடாது என்பது ஐதீகமாக கருதப்படும் நிலையில் பிரதமரே வெறும் காலுடன் கோவிலில் சுற்றி வந்த நிலையில், கோவிலில் பணியாற்றும் ஊழியர்கள் யாரும் காலணிகள் எதுவும் அணிவதில்லை என பிரதமர் கவனித்ததே பெரிய விஷயம், அந்தப் பிரச்சனைக்கும் பிரதமர் மோடி இப்பொழுது தீர்வு கண்டுள்ளார் எனவும், கோவிலில் பூஜை செய்வோரும் இந்த சணல் செருப்புக்களை அணிந்து கொள்ளலாம் என பாஜகவினர் சமூக வளைதளங்களில் இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications