வன்முறை இலக்கியங்களை வைத்திருப்பது பயங்கரவாத குற்றமல்ல! பீமா கொரேகான் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி
டெல்லி: ஆயுத புரட்சியின் மூலம் மக்களாட்சியை கவிழ்ப்பது தொடர்பான புத்தகங்களை வைத்திருப்பது பயங்கரவாத நடவடிக்கை அல்ல என்று சுப்ரீத் கோர்ட் கூறியுள்ளது. பீமா கொரேகான் வழக்கில் 'உபா' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் மற்றும் உரிமைப் போராளியான அருண் பெரைரா மற்றும் எழுத்தாளரும் உரிமை செயல்பாட்டாளருமான வெர்னான் கோன்சால்வ்ஸ் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
கடந்த 2018ம் ஆண்டு புனேவில் உள்ள பிமா கொரேகான் எனும் பகுதியில் பெரிய அளவில் தலித் சமூகத்தினர் அணிதிரண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி-மராட்டியர்கள் போரின் 200வது ஆண்டு நினைவு தினத்தை கொண்டாடினர். அப்போது இந்த பகுதியில் வன்முறை வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இதற்கு ஒரு நாள் முன்னதாக 'எல்கர் பரிஷத்' எனும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.

இந்த நிகழ்வுதான் அடுத்த நாள் நடைபெற்ற வன்முறைக்கு காரணம் என மகாராஷ்டிரா காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதனையடுத்து இந்த வழக்கு மாநில காவல்துறையிடமிருந்து என்ஐஏ வசம் ஒப்படைத்தது மத்திய அரசு. வழக்கை விசாரித்த என்ஐஏ 10 ஆயிரம் பக்கத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதில் மாவோயிஸ்ட் அமைப்புதான் இந்த கலவரத்திற்கு காரணம் என்றும், எல்கர் பரிஷத் கூட்டத்தை நடத்தியது இவர்கள்தான் எனவும் குறிப்பிட்டு இடதுசாரி ஆதரவாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களுமாகிய 16 பேரை கைது செய்தது.
அப்படி 2018ம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் (UAPA) கைது செய்யப்பட்டவர்கள்தான் வழக்கறிஞர் மற்றும் உரிமைப் போராளியான அருண் பெரைரா மற்றும் எழுத்தாளரும் உரிமை செயல்பாட்டாளருமான வெர்னான் கோன்சால்வ்ஸ். இவர்கள் மட்டுமல்லாது கவிஞர் வர வர ராவ், மனித உரிமை செயல்பாட்டாளருமான சுதா பரத்வாஜ், சிவில் உரிமைகள் செயல்பாட்டாளர் கவுதம் நவ்லங்கா உள்ளிட்டோரும் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து மூன்று ஆண்டுகள் சிறையிருந்த அருண் பெரைரா மற்றும் வெர்னான் கோன்சால்வ்ஸ் கடந்த 2021ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
ஆனால் இவர்களது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தை நாடினர். அப்போதிலிருந்து விசாரணை உத்தரவு வைக்கப்பட்டு வந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் இவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் 3ம் தேதியே விசாரணை நிறைவடைந்திருந்த நிலையில் நேற்று தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் உத்தரவை வாசித்தனர்.
ஏற்கெனவே இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்டோருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. அதேபோல கவுதம் நவ்லகாவை வீட்டு சிறைக்கு மாற்றியும் உத்தரவிட்டிருந்தது. தற்போது இதனைத் தொடர்ந்து அருண் பெரைரா மற்றும் வெர்னான் கோன்சால்வ்ஸ்-க்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் விசாரணை முடியும் வரை மகாராஷ்டிரா மாநிலத்தை விட்டு வெளியேற கூடாது என்றும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் இவர்களுக்கு ஜாமீன் வழங்கியதற்கான காரணத்தை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதாவது இவர்கள் வன்முறையை ஊக்குவிக்கும் இலக்கியங்களை வைத்திருந்ததாகவும், இது ஆயுத புரட்சியின் மூலம் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அகற்ற வழி வகுக்கும் எனவும் மத்திய அரசு குற்றம் சாட்டி இவர்களை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்திருந்தது. இந்நிலையில், நீதிமன்றம் மத்திய அரசின் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறது.
அதாவது இம்மாதிரியான இலக்கியங்களை வைத்திருப்பது பயங்கரவாத நடவடிக்கை அல்ல என்றும், இது பயங்கரவாத தடுப்பு சட்டம் (உபா) 2002 பிரிவு 15ன் கீழ் குற்றமாக கருதப்படாது எனவம் தெளிவுபடுத்தியுள்ளது. அதேபோல கடந்த 2012 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் புரட்சிகர ஜனநாயக முன்னணி ஏற்பாடு செய்த கருத்தரங்கில் ஃபெரீரா பங்கேற்றிருந்தார். இதையும் மத்திய அரசு குற்றமாக நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தது. இதையும் நீதிமன்றம் பயங்கரவாத குற்றமாக ஏற்க முடியாது என்று கூறி நிராகரித்துள்ளது. மேலும் இதனை குறிப்பிட்டு ஜாமீன் வழங்கக்கூடாது என்று கூற முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications