மோசமான உடல்நிலை.. சத்யேந்தர் ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன்..கடும் நிபந்தனையுடன் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் டெல்லி திகார் சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியின் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசாங்கத்தில் சுகாதார துறை அமைச்சராக பணியாற்றியவர்தான் சத்யேந்திர ஜெயின். அமைச்சராக சத்யேந்தர் பணியாற்றி வந்த காலத்தில் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ இவர் மீது வழக்குப் பதிவு செய்தது. இதனை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறையும், இவர் மீதும் இவரது மனைவி உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

இந்நிலையில் விசாரணைக்கு சத்யேந்தர் ஜெயின் ஒத்துழைக்கவில்லை என்று கூறி அமலாக்கத்துறை கடந்த மே மாதம் 30ம் தேதி இவரையும் இவரது நண்பர்கள் இரண்டு பேரையும் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தது. இவ்வாறு, இருக்கையில் தனக்கு ஜாமீன் வேண்டும் என்று கோரி பலமுறை சத்யேந்தர் நீதிமன்றத்தை நாடியிருந்தார். ஆனால் ஜாமீன் மறுக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் சிறையில் இவருக்கு ஸ்பெஷல் வசதிகள் செய்து தரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்ற நிலையில், இது தொடர்பான வீடியோ ஆதாரம் ஒன்றும் வெளியானது. அதாவது, ஜெயின் படுத்திருப்பதை போலவும், அவரது காலுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மசாஜ் செய்வதை போலவும் அந்த வீடியாவில் காட்சிகள் பதிவாகியிருந்துள்ளன. இதனையடுத்து இந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு சிறை காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில் ட்விஸ்ட் என்னவெனில் ஜெயினுக்கு மசாஜ் செய்யும் நபர் பாலியல் குற்றச்சாட்டில் சிறையில் இருப்பவராவார். இந்த விவகாரத்தில் திகார் சிறை கண்காணிப்பாளர் அஜித் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாஜகவும், சத்யேந்தர் ஜெயினின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. சிறையில் கூட இவ்வளவு சொகுசாக இருக்க முடியுமா? என்றும் கேள்வியெழுப்பியிருந்தது.
இது குறித்து பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ஷெஹ்சாத் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். "ஏன் சிறையில் கூட அவரால் சொகுசு இல்லாமல் இருக்க முடியாதா? இவரை கெஜ்ரிவால் பாதுகாக்க முடியுமா? இவரை ஏன் அமைச்சர் பதவியிலிருந்து தூக்கியெறிய கூடாது?" என்று ஷெஹ்சாத் கேள்வியெழுப்பியிருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று ஆம் ஆத்மி அடியோடு மறுத்தது.

பாஜக இந்த விவகாரத்தில் சதி செய்வதாகவும், வேண்டுமென்றே எங்கள் அமைச்சர் மீது வீண் பழி சுமத்தப்பட்டிருப்பதாகவும் கட்சி மறுப்பு தெரிவித்திருக்கிறது. இந்த விவகாரம் எல்லாம் சர்ச்சையாகி ஓய்ந்துவிட்டது. இவ்வாறு இருக்கையில் இரண்டாவது முறையாக சத்யேந்தர் ஜெயின் குறித்த வீடியோயும் வெளியாகி பேசுபொருளானது. அந்த நேரத்தில் குஜராத்தில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இப்படியாக பல்வேறு சர்ச்சைகளில் ஜெயின் சிக்கியிருந்த நிலையில்,
நேற்று அவர் சிறையில் உள்ள குளியலறையில் வழுக்கி விழுந்ததாகவும் எனவே தீனதயாள் உபாத்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, தற்போது இவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
நீதிமன்றத்தின் அனுமதியின்றி டெல்லியை விட்டு வெளியேற கூடாது என்றும், ஊடகங்களுக்கு அறிக்கை எதுவும் வெளியிடக்கூடாது போன்ற நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் இவருக்கு 6 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications