9 சீட்டாக்கள் உயிரிழந்த விவகாரம்! மத்திய அரசின் பதில் மீது சந்தேகம் இல்லை.. உச்சநீதிமன்றம் விளக்கம்
டெல்லி: குனோ தேசிய பூங்காவில் தற்போது வரை 9 சீட்டா சிறுத்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இது குறித்து மத்திய அரசு அளித்த விளக்கத்தின் மீது சந்தேகிக்க எந்த காரணமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இந்தியா சுதந்திரமடைந்த கொஞ்ச காலத்திலேயே சிறுத்தைகளும் இந்திய மண்ணை விட்டு மறைந்துவிட்டன. கடைசியாக 1947ம் ஆண்டு சத்தீஸ்கர் மகாராஜாவாக இருந்த ராமானுஜ் பிரதாப் சிங் தியோ மூன்று சிறுத்தைக் குட்டிகளை வேட்டையாடினார். இதனையடுத்து சிறுத்தைகளின் நடமாட்டம் எங்கும் காணப்படவில்லை. இதனையடுத்து கடந்த 1952ம் ஆண்டு அப்போதைய நேரு அரசாங்கம் இந்தியாவிலிருந்த மொத்த சிறுத்தைகளும் அழிந்துவிட்டதாக அறிவித்தது.

இந்நிலையில் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் மீண்டும் சிறுத்தைகள் கொண்டுவர திட்டமிடப்பட்டது. இதற்காக தென்னாப்பிரிக்காவுடன் ஒப்பந்தமும் போடப்பட்டது. ஒப்பந்தத்தையடுத்து தென்னாப்பிரிக்காவிலிருந்து நிபுணர்கள் குழு ஒன்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவின் குனோ பூங்காவுக்கு வந்து ஆய்வு நடத்தியது. ஆய்வின் முடிவுகள் திருப்திகரமாக இருந்த நிலையில், தென்னாப்பிரிக்காவிலிருந்து 8 சிறுத்தைகள் இந்தியா வந்து சேர்ந்தன.
இந்த சிறுத்தைகளை அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த குனோ தேசிய பூங்காவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி தனது 72வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக திறந்து வைத்தார். இந்நிலையில் சிறுத்தை இந்திய கால நிலையை புரிந்துக்கொண்டதாகவும், எனவே ஆரோக்யமாக இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில்தான் ஒவ்வொரு சிறுத்தைகளாக உயிரிழக்க தொடங்கின.
முதல் சிறுத்தை கடந்த மார்ச் 27 அன்று உயிரிழந்தது. அதைத்தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் ஒவ்வொரு சிறுத்தையாக உயிரிழந்தன. இந்த தொடர் இறப்புகள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்தடுத்து மூன்று குட்டிகள், பின்னர் மூன்று சிறுத்தைகள் என மொத்தம் 9 சிறுத்தைகள் உயிரிழந்தன. இது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. சிறுத்தைகளை பராமரிப்பவர்களுக்கு போதுமான பயிற்சி கொடுக்கப்படவில்லை என்று நிபுணர்கள் விமர்சித்திருந்தனர்.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திற்கு அவர்கள் எழுதிய கடிதத்தில், "சிறுத்தைகளின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த ரேடியோ காலர்தான் இந்த உயிரிழப்புக்கு காரணம். அதுதான் பலமான காயத்தை சிறுத்தைகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. மேலும் பூங்காவில் இருப்பவர்கள் எங்களை போன்ற நிபுணர்களை நம்ப வேண்டும். நம்பி சிறுத்தை உடல்நலம் குறித்த தகவல்களை கொடுக்க வேண்டும். தற்போது குனா பூங்காவில் சிறுத்தையை பார்த்துக்கொள்பவர்களுக்கு போதுமான பயிற்சி இல்லை.

அவர்கள் எங்களின் அபிப்ராயங்களை புறக்கணிக்கின்றனர். இந்த திட்டதை மேலோட்டமாக செயல்படுத்துகின்றனர்" என்று தென் ஆப்பிரிக்க விலங்கு நல சிறப்பு மருத்துவர் ஆட்ரியன் டோர்டிஃப் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தொடர்ச்சியாக சீட்டா சிறுத்தைகள் உயிரிழப்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருப்பதாகவும், அதன் மீது சந்தேகம் இருப்பதாகவும் எதிர் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இதனை மறுத்த நீதிபதிகள், "இந்த விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் குறித்து கேள்வியெழுப்ப எந்த காரணமும் இல்லை" என்று கூறியுள்ளது. முன்னதாக மத்திய அரசு "இந்த விஷயத்தில் பிரச்னைகள் இருக்கின்றன. அது பயமுறுத்தும் அளவுக்கு கிடையாது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications