23 பேருக்கும் துரோகி பட்டம்.. ஒருவர் கூட ஆதரவாக பேசவில்லை.. கபில் சிபல் காட்டம்.. காங்.ல் சூறாவளி!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு எதிராக கடிதம் எழுதிய 23 பேருக்கும் கட்சியில் துரோகி பட்டம் கொடுத்துவிட்டனர் என்று கடிதம் எழுதியவர்களில் ஒருவரான கபில் சிபல் கோபமாக குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை சரியில்லை, தலைவரை மாற்றி துடிப்பான ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கடந்த வாரம் 23 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தலைமைக்கு கடிதம் எழுதினார்கள். இதன் பின் நடந்த காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி காங்கிரஸ் இடைக்கால தலைவராக அடுத்த 6 மாதம் நீடிப்பார் என்று முடிவு எடுக்கப்பட்டது.
அதன்பின் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார். கபில் சிபல்,குலாம் நபி அசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த கடித்தை எழுதினார்கள். இந்த நிலையில் இந்த கடிதத்தை எழுதிய 23 தலைவர்களையும் காங்கிரஸ் கட்சி மோசமாக நடத்தியதாக கபில் சிபல் கூறியுள்ளார்.

என்ன சொன்னார்
இது தொடர்பாக கபில் சிபல் தற்போது பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், காங்கிரஸ் கட்சிக்கு வலிமையான தலைவர் தேவை. அனைவரையும் சமமாக நடத்தும் தலைவர்தான் தற்போது கட்சிக்கு தேவை. காங்கிரஸ் தனது கட்சியின் விதியை பின்பற்ற வேண்டும். கட்சிக்குள் ஜனநாயகத்தை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளனர்.

பாஜக எப்படி
பாஜக ஜனநாயகத்தை உடைக்கிறது. ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறது என்று குற்றச்சாட்டை காங்கிரஸ் தலைவர்கள் வைக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி ஜனநாயகத்தை அவர்கள் காக்க தவறிவிட்டார்கள். அவர்களை எதிர்த்து கேள்வி கேட்க கூடாது என்று கூறுகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்குள் விசுவாசத்தை விட, திறமையே முக்கியம்.

திறமை ஏன்
கட்சியை நிர்வகிக்கும் திறமை, கட்சியை முன்னேற்றும் நோக்கம், பிரச்சனையை சமாளிக்கும் திறன் ஆகியவை அவசியம். உறுப்பினர்களின் கோரிக்கைக்கு செவி மடுக்கும் நபர்தான் இப்போ தேவை. நாங்கள் எழுதிய கடிதத்தில் ஏதாவது இருந்தால் அதை குறிப்பிடலாம். ஆனால் அதற்கு பதிலாக எங்களை கருத்து ரீதியாக தாக்குகிறார்கள்.

துரோகி என்றனர்
எங்களை துரோகிகள் என்று கூறுகிறார்கள். ஆனால் காரிய கமிட்டியில் இருக்கும் யாரும் இதை எதிர்க்கவில்லை. எங்களை துரோகி என்று சிலர் கூறியதை கட்சியின் தலைவர் கூட எதிர்த்து கேட்கவில்லை. அதிலும் எங்களை குறித்து அச்சில் ஏற்றமுடியாத சில விஷயங்களை குறிப்பிட்டு உள்ளனர். நாங்கள் மிக நேர்மையாக கடிதம் எழுதி இருந்தாலும் எங்களை பற்றி தவறான வார்த்தைகளில் விமர்சனங்களை வைக்கிறார்கள்.

கேள்வி கேட்கவில்லை
எங்களை கட்சிக்குள் தாக்கி சிலர் பேசிய போது, அதை யாரும் கேள்வி கேட்கவில்லை. ஆனால் ஏன் இந்த லெட்டரை இப்போது எழுதினீர்கள் என்று கேட்கிறார்கள். கட்சியின் பாதுகாப்பிற்காக, எதிர்காலத்திற்காக நாங்கள் கடிதம் எழுதினோம். ஆனால் அதை பற்றி காரிய கமிட்டி கூட்டத்தில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதுதான் எனக்கு இன்னும் வருத்தத்தை அளிக்கிறது, என்று கபில் சிபல் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.











Click it and Unblock the Notifications