நியூஸ் க்ளிக் நிறுவனர் விடுதலை.. நீதிமன்ற உத்தரவுக்கு காரணம் இதுதான்! கபில் சிபில் வைத்த பாயிண்ட்!
டெல்லி: நியூஸ் க்ளிக் இணைய ஊடகத்தின் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தாவை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கடந்த ஆண்டு உபா சட்டத்தில் கைது செய்தனர். இந்நிலையில், இந்த கைது நடவடிக்கை சட்ட விரோதம் என்று கூறிய உச்சநீதிமன்றம், அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த விடுதலைக்கு கபில் சிபில் வைத்த வாதம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
டெல்லியில் உள்ள நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் அலுவலக நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திடீர் ரெய்டை மேற்கொண்டது.

இந்த ரெய்டின் போது பத்திரிகையாளர்களிடம் இருந்து மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு ரெய்டு நடத்தப்பட்ட அக்.3ம் தேதி மாலையே டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் சீல் வைத்தனர். பின்னர் இதன் நிறுவனரான பிரபிர் புர்கயஸ்தாவை போலீசார் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (உபா - UAPA) கைது செய்தனர்.
சீனாவுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்ய அமெரிக்க கோடீஸ்வரர் நெவில் ராய் என்பவரிடம் இருந்து பணம் பெற்றதாக புகார் எழுந்ததன் அடிப்படையில் இந்த ரெய்டும், கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இதற்கும் முன்னதாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை ஏற்கனவே நியூஸ் க்ளிக் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை வந்திருந்தது.
இதனையடுத்து அதிரடி ரெய்டு, திடீர் கைது போன்றவை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், நியூஸ் க்ளிக் இணைய ஊடகத்தின் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தாவின் கைது நடவடிக்கை சட்டவிரோதம் என்று கூறி உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்திருக்கிறது. இதற்கு கபில் சிபில் வைத்த வாதம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. ஏப்ரல் 30ம் தேதி விசாரணையை முடித்திருந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. வழக்கு விசாரணையில் புர்காயஸ்தா சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும், டெல்லி போலீஸ் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜுவும் ஆஜராகியிருந்தனர்.
கபில் சிபில், “கடந்த அக்.3ம் தேதி முதல் புர்காயஸ்தா காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். ஒருவர் கைது செய்யப்படும்போது அதற்கான காரணங்கள் எழுத்துப்பூர்வமாக அவருக்கோ, அவருடைய வழக்கறிஞருக்கோ தெரிவிக்கப்பட வேண்டும்.
ஆனால் இந்த வழக்கில் அப்படி ஏதும் தெரிவிக்கப்படவில்லை. புர்கயாஸ்தா கைது குறித்து அவரது வழக்கறிஞருக்கு தெரிவிக்காமல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தியிருக்கிறார்கள். எனவே இந்த கைது நடவடிக்கை சட்ட விரோதமானது" என்று வாதாடினார்.
கபில் சிபிலின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வாதங்களின் அடிப்படையில் புர்காயஸ்தாவை விடுவிக்கிறோம் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications