ஓரின திருமணத்திற்கு அங்கீகாரம் கோரிய வழக்கு.. துவக்கம் முதல் இறுதி வரை நடந்தது இதுதான்.. டைம்லைன்
டெல்லி: ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதை நாடாளுமன்றம், சட்டமன்றங்களே முடிவு செய்யும் என உச்ச நீதிமன்ற தெரிவித்துள்ளது. இந்த வழக்கு கடந்து வந்த பாதையை இங்கே காணலாம்.
ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை மே 11ஆம் தேதி விசாரணை முடிந்த பின் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எஸ்.ஆர்.பட், ஹிமா கோஹ்லி மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதை நாடாளுமன்றம், சட்டமன்றங்களே முடிவு செய்யும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார். ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்க உச்ச நீதிமன்றம் இன்றைய தீர்ப்பில் மறுத்துவிட்டது ஆனால் தன் பாலினத்தவர் உரிமைகளை நிலைநிறுத்த மத்திய அரசை நாடவேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் டைம்லைனை பார்க்கலாம்;
நவம்பர் 25, 2022: சுப்ரியோ சக்ரபோர்த்தி- அபய்தங், பார்த் பிரோஸ் மெஹ்ரோத்ரா மற்றும் உதய் ராஜ் ஆனந்த் ஆகிய இரண்டு ஓரினசேர்க்கை ஜோடிகள் சிறப்பு திருமண சட்டத்தின் படி ஓரின சேர்க்கை திருமணத்திற்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்தனர்.
டிசம்பர் 14,2022: இந்தியாவை சேர்ந்த ஒருவரும் அமெரிக்காவை சேர்ந்த ஒரு ஓரின சேர்க்கை ஜோடி வெளிநாட்டு திருமண சட்டப்படி தங்கள் திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் விடுத்தது.
ஜனவரி 6, 2023: ஓரின சேர்க்கை தொடர்பாக உயர் நீதிமன்றங்களில் இருந்த அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
மார்ச், 12: ஓரின சேர்க்கை திருமணத்திற்கு இந்தியாவில் அங்கீகாரம் அளிக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. நீதிமன்றத்தால் ஒட்டு மொத்த கொள்கையையும் மாற்ற முடியாது என்றும் பதில் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
மார்ச் 13: ஓரினசேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் கோரிய அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
மார்ச் 13: அரசியல் சாசன சட்டப்பிரிவு 14,19 மற்றும் 21 வாழும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் கண்ணியத்திற்கான உரிமை வழங்குவதாக மனுதாரர்கள் தெரிவித்து இருந்தனர்.
ஏப்ரல்: 1 - ஜாமியாத் உல்மா இ ஹிந்த் என்ற முஸ்லீம் அமைப்பு ஓரின சேர்க்கை திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்தது. ஓரின சேர்க்கை என்பது இஸ்லாமிய மதத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாக இருப்பதாகவும் தனது மனுவில் கூறியிருந்தது.
ஏப்ரல்- 6 - குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தது. ஓரின சேர்க்கை திருமணத்திற்கு ஆதரவாகவும் ஓரின சேர்க்கை ஜோடிகள் குழந்தைகளை தத்தெடுக்க ஆதரவாகவும் மனு தாக்கல் செய்தது.
ஏப்ரல் 15: ஓரின சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் கோரிய மனுக்களை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
ஏப்ரல்: 17- இந்த வழக்கில் புதிய மனு ஒன்றை மத்திய அரசு தாக்கல் செய்தது. மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து கேள்வி எழுப்பியிருந்த மத்திய அரசு ஒரே பாலின திருமணங்களை நீதித்துறை தீர்ப்பின் மூலம் அங்கீகரிக்க முடியாது என்று கூறியது.
ஏப்ரல்: 18- ஓரின சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் கோரிய மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமண்றம் தொடங்கியது.
ஏப்ரல் 27- ஓரின சேர்க்கை ஜோடிகளுக்கு சட்டப்பூர்வ திருமண அங்கீகாரம் இன்றி வழங்க முடிகிற சமூக பலன்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
மே 11- உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழக்கின் விசாரணையை முடித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
அக்டோபர் 17 - தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications