திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு கலப்படம்: திண்டுக்கல் ராஜசேகரன் உட்பட 4 பேர் அதிரடி கைது!
டெல்லி: ஆந்திரா மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க விநியோகிக்கப்பட்ட நெய்யில் மாட்டு கொழுப்பை கலப்படம் செய்ததாக புயலை கிளப்பிய விவகாரத்தில் திண்டுக்கல் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜசேகர் உட்பட 4 பேர் சிறப்பு புலனய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு தயாரிப்புக்காக அனுப்பி வைக்கப்படும் நெய்யில் கலப்படம் இருக்கிறது என முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து திருப்பதியில் லட்டு தயாரிக்க நெய்யை அனுப்பும் நிறுவனங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டன. மேலும் சர்ச்சைக்குரிய சந்தேக நிறுவனங்கள் அனுப்பி வைத்த நெய் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த பரிசோதனைகளில் நெய்யில், மாட்டுக் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றமும் விசாரித்தது. பின்னர் சிபிஐ தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றையும் உச்சநீதிமன்றம் அமைத்தது. இதில் சிபிஐ தரப்பில் 2 அதிகாரிகள், ஆந்திரா காவல்துறை அதிகாரிகள் 2 பேர், உணவுத் தர கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த சிறப்பு புலனாய்வுக் குழு தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிலும் சோதனை நடத்தியது. இதேபோல உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்த பின்னணியில் திருப்பதி லட்டுக்கான நெய் கலப்பட விவகாரத்தில் 4 பேரை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். திண்டுக்கல் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜசேகரன், உத்தரகாண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த விபின் ஜெயின்,பொமில் ஜெயின், அபூர்வா சாவ்டா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசாரணைகளின் போது திருப்பதி லட்டுக்காக நெய் விநியோகம் செய்யும் ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் உத்தரகாண்ட், தமிழக நிறுவனங்களின் ஆவணங்களை போலியாக பயன்படுத்தி இருப்பதும் அம்பலமாகி உள்ளது. இதனால் இந்த வழக்கில் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் தொடரும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications