ரொம்ப புண்படுத்திட்டாங்க.. திருப்பதி லட்டு விவகாரத்துக்காக உச்ச நீதிமன்றம் சென்ற வழக்கறிஞர்
டெல்லி: புகழ்பெற்ற திருப்பதி கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் அடிப்படை இந்து மத வழக்கங்களை மீறுவதாகவும், பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகவும் உள்ளது என்று குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளைத் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு கூறியதில் இருந்து இப்பிரச்சனை நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டதாகவும், புனிதமான திருப்பதி லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி அசுத்தப்படுத்தியதாகவும் வைத்த குற்றச்சாட்டு வைத்தார். முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இந்தக் குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மறுத்தது.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி சுப்பா ரெட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதம் மற்றும் பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையை சந்திரபாபு நாயுடு காயப்படுத்தி உள்ளார். சந்திரபாபு அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்யத் தயங்கமாட்டார் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமைலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யை சோதனை செய்யப்பட்டதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில், மாட்டுக் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் உள்ளிட்டவை லட்டில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள தனியார் ஆய்வகம் திருப்பதியில் வழங்கப்படும் லட்டை பரிசதோனை செய்து தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யின் மாதிரிகளில் பாமாயில், மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பு உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்புகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மக்கள் புனிதமாகக் கருதும் கோவில் பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டது குறித்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தியதாகக் கூறப்படுவது கோயில் நிர்வாக அமைப்பில் உள்ள சிக்கல்களின் அறிகுறி என்றும், இந்து மத நடைமுறைகளின் புனிதம் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் சத்யம்சிங் என்பவர் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், மத நடைமுறைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. மேலும், அரசியலமைப்புச் சட்டம் 25 வது பிரிவு, மத சுதந்திரம் மற்றும் மத பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதற்கான உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால், அந்தச் சட்டத்தை மீறும் வகையில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கோயிலில் உள்ள நிர்வாக சிக்கல்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
பிரசாதம் என்பது கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட விஷயமாக பக்தர்களால் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த விவகாரம் பக்தர்களின் மத உணர்வைப் புண்படுத்திவிட்டது. கோயில்களில் அர்ப்பணிப்போடும், கலாசார உணர்வுடன் கூடிய நிர்வகாத்தை அமைக்க வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்தியுள்ளது. இந்தப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு இந்து மத நடைமுறைகளைப் பாதுகாக்கவும், கோயில்களில் முறையான நிர்வாகத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications