பாஜகவின் 400 இடங்கள் கோஷத்தை கிண்டலடித்து லோக்சபாவில் 'நையாண்டி தர்பார்' நடத்திய திரிணாமுல் எம்பி!
டெல்லி: லோக்சபா தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என பாஜக முன்வைத்த முழக்கத்தை கிண்டலடித்து இன்று லோக்சபாவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி 'சவுண்ட் எபெக்ட்' கொடுத்தபடி பேசியது 'நையாண்டி தர்பார்' நிகழ்ச்சியைப் பார்ப்பது போலவே இருந்தது. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாகவும் பகிரப்பட்டு வருகிறது.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இன்று காலை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசினார். அவரைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி உரையாற்றினார்.

கல்யாண் பானர்ஜி கிண்டலும் கேலியுமாக நையாண்டி தர்பார் நிகழ்ச்சியில் பங்கேற்றது போல பேசினார். அதுவும் பாஜகவின் லோக்சபா தேர்தல் முழக்கமான 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவோம் முழக்கத்தை குறிப்பிட்டு chu-kit-kit என உரக்கமாக கிண்டலடித்து சபையில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் 400 இடங்களுக்கு மேல் வெல்வோம் என முழங்கினீர்களே.. கிடைத்தது வெறும் 240 தானே என்றார் கல்யாண் பானர்ஜி. மேலும் மோடி கொடுத்த கியாரன்ட்டிக்கு (உறுதி மொழிகளுக்கு) வாரன்ட்டி எதுவும் இல்லை எனவும் கிண்டலடித்தார்.
அத்துட ன் மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தல்களிலும் பாஜக பெரும் தோல்வியைத்தான் சந்திக்கப் போகிறது. லோக்சபா தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ஏன் 7 கட்டமாக நடத்தியது? யாருக்காக 7 கட்டமாக தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியது? என்பதற்கு பதில் தேவை என்றார் கல்யாண் பானர்ஜி.
கல்யாண் பானர்ஜியின் இந்த 24 நிமிட நகைச்சுவையான பேச்சை ஒட்டுமொத்த "இந்தியா" கூட்டணி எம்பிக்களும் சிரிப்புடன் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். அதேநேரத்தில் பாஜக கூட்டணி எம்பிக்கள் கடும் அதிருப்தியுடன் அமர்ந்திருந்தனர்.
மேலும் கல்யாண் பானர்ஜியின் விமர்சன பேச்சை சபைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என பாஜக எம்பிக்கள் வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications