டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்த தங்கம் தென்னரசு.. 100 நாள் வேலை நிதியை உடனே விடுவிக்க கோரிக்கை
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சந்தித்தார். ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தமிழ்நாட்டு திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், நிதிப்பகிர்வு திட்டப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதியையும் வழங்குமாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வலிவுறுத்தியுள்ளார். 100 நாள் வேலை திட்டத்திற்கான ரூ.1,056 கோடி ஊதிய நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அப்போது திமுக எம்.பி கனிமொழி, ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் உடன் இருந்தனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது தொழிலாளர் வரவு செலவு திட்டத்தின்படி ஊதிய நிதி முற்றிலும் தீர்ந்து விட்டதால், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் தமிழ்நாடு தொழிலாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ரூ.1,056 கோடி ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் கடினமாக உழைத்த தொழிலாளர்களுக்கு ஊதியத்திற்கான நிதி விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நிலுவையில் உள்ள ரூ.1.056 கோடி ஊதிய நிலுவை தொகையை விடுவிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கான ரூபாய் 1,056 கோடி நிதியை விடுவிக்க கோரி டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி ஆகியோர் மனு அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications