ஆளுநர் இஷ்டப்படி முடிவெடுக்கலாமா? மசோதாவை நிறுத்தி வைத்த காரணம் சொல்லுங்க.. சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: "ஆளுநர் தனக்கு வேண்டியபடி சுயமாக முடிவு எடுத்துள்ளார். எந்த ஆதாரங்களும், ஆவணங்களும் இல்லாமல் மசோதாக்களை நிறுத்தி வைத்ததற்கு ஆதரவாக வாதிடுவதை ஏற்க முடியாது. ஆளுநர் 10 மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் நிறுத்தி வைத்ததற்கு என்ன காரணம் என்பதை விளக்க வேண்டும்" என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்நிலையில், துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழு தொடர்பான விவகாரத்தைச் சேர்த்து விசாரிக்கக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆளுநர் vs தமிழ்நாடு அரசு
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜே.பி பார்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் வாதிடுகையில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் சட்டப்பேரவையில்தான் சட்டங்கள் அனைத்தும் இயற்றப்படும். ஆளுநர் மாளிகையில் ஒருபோதும் சட்டங்கள் இயற்றவே முடியாது என்பதை நீதிமன்றங்கள் பல்வேறு வழக்குகளில் சுட்டிக்காட்டி இருக்கின்றன.
ஆளுநர் என்பவரின் அதிகாரம் குறித்த கேள்விகளை எழுப்பி அதனைச் சரி செய்தும் வைத்திருக்கின்றன நமது நீதிமன்றங்கள். ஒரு மாநில அரசானது மத்திய அரசின் பட்டியலில் உள்ள துறை சார்ந்து ஒரு சட்டம் இயற்றுகிற போது அதனை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. அதனை நாம் மறுக்க முடியாது. அதே நேரத்தில் பொதுப்பட்டியல் அல்லது மாநில அரசின் பட்டியல் உள்ள துறை சார்ந்த ஒரு மசோதாவை மாநில சட்டப்பேரவை நிறைவேற்றினால் அதை ஆளுநரால் நிறுத்தி வைக்கவே முடியாது.
தமிழக அரசு வாதம்
ஏனெனில் ஆளுநர் என்பவர் மாநில சட்டப்பேரவைகள் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது அறிவுரை அல்லது ஆலோசனை கூறுகிற ஒரு ஆலோசகர் தான். ஆளுநர் என்பவர் சட்டங்கள் மீது முடிவெடுக்கக் கூடிய அதிகாரம் கொண்டவர் அல்ல." என வாதம் வைக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள் "அரசியல் சாசன பிரிவு 200ன் கீழ் ஆளுநர் தனது விருப்பத்தின்படி, முடிவு எடுக்க முடியாதா?" எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழ்நாடு அரசுத் தரப்பில், "அரசியல் சாசனத்தின் அடிப்படையில், மாநில அமைச்சரவை ஆலோசனைப்படியே ஆளுநர் முடிவெடுக்க முடியும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள் கேள்வி
இதையடுத்து, சட்டப்பேரவையில் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் என்ன மாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டும்? மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், ஆளுநர் ரவி மௌனமாக இருக்கலாமா? ஆளுநர் மௌனமாக இருப்பதை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்பதற்கு விடை காண வேண்டும். தமிழக அரசு அனுப்பிய மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்பது மாநில அரசுக்கு எப்படி தெரியும்? என நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.
அதைத்தொடர்ந்து விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று பிற்பகலில் நடைபெற்ற வழக்கின் வாதத்தின்போது, ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தார். "ஆளுநர் ஏதோ தேவையில்லாத இடத்தில் உள்ளார் என்று சித்தரிக்கப்படுகிறது" என வாதிட்டார்.
10 மசோதாக்கள் மீது முடிவெடுக்க மறுப்பது ஏன்?
அதற்கு நீதிபதிகள், "ஆளுநர் பதவியை, அவரது அதிகாரத்தை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. ஏன் 12 மசோதாக்கள் மீது முடிவெடுக்கவில்லை என்று தான் கேட்கிறோம் 2 மசோதாக்களை ஏன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்? 10 மசோதாக்கள் மீது ஏன் முடிவெடுக்க மறுக்கிறார்?
ஆளுநர் மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் நிறுத்தி வைத்தார் என்றால், எந்த பிரிவின் படி செய்தார்? அரசியல் சாசனம் 200 அல்லாமல் வேறு ஏதேனும் விதிமுறை உள்ளதா?" என்று கேள்வி எழுப்பினர். மேலும், நீதிபதிகள் "அரசு மறுபடியும் மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பும் போது மசோதாக்களை ஆளுநரால் நிறுத்திவைக்க முடியுமா?" எனக் கேள்வி எழுப்பினர்.
ஆளுநர் தரப்பு வாதம்
அதற்கு ஆளுநர் தரப்பு, "ஆளுநர் மசோதாவை திரும்ப அனுப்பினால் அதனை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றுமானால் அது சட்டமாகிவிடும், பல்கலைக்கழக துணை வேந்தர் என்பது ஒரு மிக முக்கிய பொறுப்பு, அதனை அரசு மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று கருதுகிறீர்களா?" என வாதிட்டது.
அதற்கு நீதிபதிகள், "ஒரு மாநிலத்தின் அரசு என்ன செய்ய முன்வருகிறதோ அது ஆளுநருக்கு பிடிக்கவில்லை என்றால் அது அவருடைய சொந்தக் கருத்துதானே?" எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆளுநர் தரப்பு, "தமிழ்நாடு அரசு மறைமுகமாக நீதிமன்றத்தின் மூலம் தங்களது மசோதாக்களை சட்டப்பூர்வமாக்க கோருகிறார்கள்." என வாதிட்டது.
ஆளுநர் காரணத்தை சொல்ல வேண்டும்
தொடர்ந்து நீதிபதிகள், "நாங்கள் கேட்பது, அனைத்து மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் வாய்ப்பு இருந்தபோது, ஏன் 2 மட்டும் முதலில் அனுப்பினார்? அதைச் சொல்லுங்கள். ஆளுநர் மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் நிறுத்தி வைத்தார் (with hold) என்றால் அது எந்த பிரிவின் படி?, அரசியல் சாசனம் 200 அல்லாமல் வேறு ஏதேனும் விதிமுறை உள்ளதா?
தமிழ்நாடு ஆளுநர் தனக்கு வேண்டியபடி சுயமாக முடிவு எடுத்துள்ளார். ஏன் 3 ஆண்டுகளுக்கும் மேலாக மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளார் என்பதற்கு ஆளுநர் விளக்கம் அளிக்க வேண்டும். 3 ஆண்டுகளாக பரிசீலித்து வரும் மசோதாக்களில் அப்படி என்ன மோசமான விஷயம் இருக்கிறது?
எந்த ஆதாரங்களும் ஆவணங்களும் இன்றி ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்ததற்கு ஆதரவாக வாதிடுவதை ஏற்க முடியாது. 10 மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் நிறுத்தி வைத்த காரணத்தை ஆளுநர் கூற வேண்டும்" என்று நீதிபதிகள் தெரிவித்து வழக்கு விசாரணையை நாளைக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications