ஹிண்டன்பர்க் புகார்.. அதானி வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்கு நகருமா? எகிறும் எதிர்பார்ப்பு
டெல்லி: ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் குறித்து அதானி குழுமத்தின் மீது விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணை தொடர்பான அனைத்து தரப்பினரும் அறிக்கைகளை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. இதனையடுத்து வழக்கின் விசாரணை அடுத்த கட்டத்திற்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாயத்து என்ன?: அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான 'ஹிண்டன்பர்க்' சில மாதங்களுக்கு முன்னர் அதானி குழுமம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது. 413 பக்கங்கள் கொண்ட இந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமம் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருந்ததாக குற்றம்சாட்டியிருந்தது. முறைகேட்டில் ஈடுபட்ட காலகட்டத்தில் அதானி குழுமத்தின் பங்குகள் அபரிமிதமாக வளர்ந்தன என்றும், பங்கு மதிப்புகளை அதிகரிக்க போலி நிறுவனம் தொடங்கப்பட்டு, அந்நிறுவனங்கள் வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளன எனவும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது.

ஆதாரம்: இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக அதானி குழுமத்தின் சொத்து மதிப்பை ஹிண்டன்பர்க் குறிப்பிட்டிருக்கிறது. அதாவது தற்போது அதானியின் சொத்து மதிப்பு ரூ.9.84 லட்சம் கோடி. இதில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்படும் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.8.2 லட்சம் கோடி சொத்து சேர்ந்திருக்கிறது. மொத்த சொத்தில் இது முக்கால்வாசியாகும். இதுமட்டும் இல்லாமல் இந்த காலத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 819% வளர்ச்சியடைந்திருக்கின்றன. இதைத்தான் ஹிண்டன்பர்க் ஆதாரமாக குறிப்பிட்டிருக்கிறது.
இழப்புகள் என்ன?: இந்த முறைகேடுகள் காரணமாக அதானி சட்டவிரோதமாக ஒரு பெரும் நிறுவனமாக வளர்ச்சியடைந்திருக்கிறது என்றும், இதனால் மற்ற நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது என்றும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை காரணமாக அதானியின் பங்குகள் வரலாறு காணாத அளவில் சரிந்தன. அதானி குழுமத்தில் முதலீடு செய்திருந்த சிறு குறு நிறுவனங்களும் இதனால் இழப்பை சந்தித்தன. இது பொருளாதார வளர்ச்சியில் அடிவாங்கியது.
வழக்கு: இது தவிர அதானி நிறுவனத்தில் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளும் முதலீடு செய்யப்பட்டன. ஏற்கெனவே அதானி நஷ்டமடைந்துள்ளது எனில் இந்த பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளின் நிலை என்ன? என்று எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மெற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம்.சாப்ரே தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
விசாரணை நிலவரம்: ஆனால் பங்குசந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி (SEBI) செய்த மாற்றங்கள் காரணமாக நிபுணர் குழுவின் விசாரணை திறன் கட்டுப்படுத்தப்பட்டதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எம்.சாப்ரே உச்சநீதிமன்றத்தில் கடந்த மே மாதம் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து செபி இது குறித்து விசாரணையில் இறங்கியது.
விசாரணை குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி உச்சநீதிமன்றத்தில் செபி அறிக்கை தாக்கல் செய்தது. அதில், "24 அம்சங்கள் குறித்த விசாரணையில் 22 விசாரணைகள் நிறைவடைந்துவிட்டன. மீதமுள்ள இரண்டு குறித்து விசாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளோம்" என்று கூறியிருந்தது. இதன் பின்னர் ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என பட்டியலிடப்பட்டது. ஆனால் அப்போதிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக விசாரணை தள்ளி போய் கொண்டே இருக்கின்றன.
பிரசாந்த் பூஷன் வாதம்: இது குறித்து எதிர் மனுதாரர் தரப்பில் ஆஜரான பிரசாந்த் பூஷன், "வழக்கு தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. எப்போதுதான் இது விசாரணைக்கு வரும்?" என்று கேள்வியெழுப்பியிருந்தார். இதனையடுத்து விசாரணை அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினரும் தங்களது அனைத்து அறிக்கைகளையும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அதற்கு இன்றுதான் கடைசி நாள் எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து இன்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் வழக்கு விசாரணை அடுத்த கட்டத்திற்கு நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications