வாரிசு ஆதிக்கம் இல்லை.. தேர்வு முறையில் வெளிப்படை.. விளையாட்டில் இந்தியா சாதிக்க இதுவே காரணம்- மோடி
டெல்லி: விளையாட்டில் நெப்போட்டிஸத்தை அழித்து, தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மையை பின்பற்றியதால் தான் இந்தியா பதக்கங்களை குவித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
Recommended Video
நாடு முழுவதும் 76வது சுதந்திர தினம் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றினார். தொடர்ந்து செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இளைஞர்கள் அடுத்த 25 ஆண்டுகளை தேசத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
டெலிபிராம்ப்டர் இல்லை-பேப்பர் குறிப்புகளுடன் 82 நிமிடம் உணர்ச்சிமிகு உரையாற்றிய பிரதமர் மோடி

பிரதமர் மோடி வேண்டுகோள்
ஒட்டுமொத்த மனித குலத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவோம். அதுதான் இந்தியாவின் பலம். ஒவ்வொரு இந்தியனுக்கும் எனக்கு ஒரு வேண்டுகோள். அன்றாட வாழ்வில் பெண்களை நோக்கிய மனநிலையை மாற்ற வேண்டும் என்பதே அது. இந்தியாவின் கனவுகளை நிறைவேற்றுவதில் மகளிரின் பங்கு முக்கியமாக இருக்கும் வகிக்கும் என்று தெரிவித்தார்.

காமன்வெல்த் போட்டிகள்
தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இந்திய அணியின் சாதனை வெற்றி குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அதில், சமீபத்தில் முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நாம் சிறப்பாகச் செயல்பட்டதை உலகமே பார்த்தது. இதற்கு முன்னர், நம்மிடம் திறமை இல்லாமல் இல்லை. அப்போதும் இருந்தது. ஆனால் இப்போது வெற்றிபெற்றதற்கு, வெளிப்படையான தேர்வு முறையும், நேபாட்டிசம் இல்லாமல் பார்த்துக்கொண்டதே, இந்தியா பதக்கங்களை வெல்ல முக்கியக் காரணமாக இருக்கிறது.

நெப்போட்டிஸம்
அரசியலை போன்று விளையாட்டுகளிலும் நெப்போட்டிஸம் இருக்கிறது. இது விளையாட்டு போட்டிகளுக்கான தேர்வு முறையில் இருந்துள்ளது. ஆனால் அதிலிருந்து நாடு மாற்றத்தை கண்டுவிட்டது. அதனால் தான் நமது விளையாட்டு வீரர்கள் விண்ணை எட்டிப்பிடிக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் விளையாட்டு வீரர்கள் தங்கம், வெள்ளி என்று பதக்கங்களை வெல்லும் போது, இளைஞர்களின் நம்பிக்கை அதிகரிக்கிறது என்று தெரிவித்தார்.

இந்தியாவின் பதக்கங்கள்
அண்மையில் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விருந்தளித்து கலந்துரையாடினார். இந்த நிலையில் சுதந்திர தின உரையின் போது விளையாட்டு வீரர்களின் சாதனைகள் பற்றி பேசியிருப்பது பல்வேறு தரப்பினர் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 22 தங்கம் உட்பட 61 பதக்கங்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.