குடியரசுத் தலைவர் முர்முவை சந்திக்கும் பழங்குடி மக்கள்! வாழ்த்து தெரிவிக்க நீலகிரி டூ டெல்லி பயணம்
டெல்லி: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று டெல்லியில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கின்றனர், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியினர்.
திரெளபதி முர்மு குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக கடந்த பிப்ரவரி மாதம் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர இருந்தார். குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு வந்து போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டது. இதனால் நீலகிரி பயணமும் ரத்து செய்யப்பட்டது. முன்னதாக இந்த பயணத்தின்போது குடியரசுத் தலைவரை சந்திக்க பழங்குடியின மக்கள் அனுமதி கேட்டிருந்தனர்.
ஆனால் பயணம் ரத்தான நிலையில், அவரை சந்திக்க முடியவில்லை. எனவே, நீலகிரி மாவட்ட பண்டைய பழங்குடியினர் சார்பில், குடியரசுத் தலைவரை சந்திக்க விருப்பம் தெரிவித்து பண்டைய பழங்குடியின தலைவர் ஆல்வாஸ் ஆகியோர் குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியிருந்தனர். இதனையடுத்து இன்று குடியரசுத் தலைவரை சந்திக்க அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து நீலகிரி, ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கோத்தர், தோடர், இருளர், குறும்பர், பனியர், காட்டுநாயக்கர் ஆகிய பண்டைய பழங்குடி இனத்தைச் சேர்ந்த 82 பேர் நீலகிரியில் இருந்து பேருந்து மூலம் சென்னைக்கு வந்து, அங்கிருந்து ரயில் மூலம் டெல்லி சென்று சேர்ந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக திட்டமிட்டவாறு குடியரசுத் தலைவரை அவர்கள் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பழங்குடி சமூகத்தினர் கூறுகையில், "நாட்டின் குடியரசு தலைவராக முதன் முறையாக பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது வரலாற்று திருபுமுனையான விஷயம். எனவே நாங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க சென்றுக்கொண்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications