காங்கிரசை மதிக்காத மம்தா, அகிலேஷ்.. டெல்லியில் ஆம்ஆத்மிக்கு திரிணாமுல் காங்கிரஸ் - சமாஜ்வாதி ஆதரவு
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தைலையொட்டி ‛இந்தியா' கூட்டணி உடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக ஆம்ஆத்மி கட்சிக்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) அணி ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 36 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. அடுத்த மாதம் டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது.

இதனால் தற்போது டெல்லி சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 5ம் தேதி அங்கு ஒரே கட்டமாக 70 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு பிப்ரவரி 8 ம் தேதி ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இன்று வேட்பு மனுத்தாக்கல் என்பது தொடங்குகிறது.
டெல்லி சட்டசபை தேர்தலை பொறுத்தமட்டில் தற்போது மும்முனை போட்டி நிலவுகிறது. ஆளும் ஆம்ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகியவை தனித்தனியே போட்டியிடுகின்றன. ஆம்ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ‛இந்தியா' கூட்டணியில் உள்ளது. ஆனாலும் டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட ஆம்ஆத்மி மறுத்துவிட்டது. இதனால் தான் மும்முனை போட்டி நிலவுகிறது. தற்போது ஆம்ஆத்மி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு மக்களை கவரும் வகையில் பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தான் டெல்லி சட்டசபை தேர்தலில் ‛இந்தியா' கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளன. அதாவது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, உள்ளிட்ட கட்சியினர் ஆம்ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த கட்சிகள் ‛இந்தியா' கூட்டணியில் உள்ள நிலையில் காங்கிரஸை புறம்தள்ளிவிட்டு ஆம்ஆத்மி பக்கம் நிற்கின்றன.
அதேபோல் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் (யுபிடி) அணியும் ஆம்ஆத்மி கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் தான் உள்ளது. இருப்பினும் அதனை அந்த கட்சி இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. மாறாக காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலை தனிப்பட்ட முறையில் துரோகி என்று காங்கிரஸ் விமர்சனம் செய்ததை உத்தவ் தாக்கரே அணி கடுமையாக சாடியது. இதுபற்றி அதன் மூத்த தலைவர் சஞ்சவ் ராவத் கூறுகையில்,‛‛நாங்கள் இன்னும் ஆம் ஆத்மி கட்சிக்கு எங்கள் ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இரண்டும் எங்கள் நண்பர்கள். ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது வலுவாக இருக்கிறார் என்பது உண்மைதான்" என்றார்.
அதேபோல் உத்தவ் அணியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் "டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு இடையே தான் போட்டி என்பது உள்ளது. ஆனாலும் காங்கிரஸ் கட்சி களத்தில் உள்ளது. அதோடு காங்கிரஸ், பாஜகவுக்கு பதிலாக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியை தாக்கி பேசி வருகிறது'' என்று சாடியிருந்தது. இதன்மூலம் உத்தவ் அணி, அரவிந்த் கெஜ்ரிவால் பக்கம் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் டெல்லி சட்டசபை தேர்தலில் ‛இந்தியா' கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.
இருப்பினும் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. அதேபோல் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி எனும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவை இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு வழங்கவில்லை. இதுபற்றி தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ‛‛ இந்தியா கூட்டணி அமைந்த தொடக்கத்திலேயே இது லோக்சபா தேர்தலுக்கானது மட்டுமே என்று முடிவு செய்யப்பட்டது. பீகாரை பொறுத்தவரை, நாங்கள் தொடக்கத்தில் இருந்தே ஒன்றாக இருக்கிறோம்'' என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் கூறுகையில், ‛‛சிபிஐ(எம்) இரண்டு இடங்களில் [டெல்லியில்] போட்டியிடுகிறது. ஓரிரு இடங்களில் போட்டியிடும் மற்ற இடதுசாரி கட்சிகளுக்கும் நாங்கள் ஆதரவளிப்போம். மற்ற எல்லா இடங்களிலும், பாஜகவுக்கு எதிராக வலுவான வேட்பாளரை நாங்கள் ஆதரிப்போம். 'பாஜகவை தோற்கடி.. டெல்லியைக் காப்பாற்று' என்பது எங்கள் முழக்கம்'' என்று கூறினார். இதன்மூலம் அவர் காங்கிரஸ், ஆம்ஆத்மி ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்ய மறுத்துவிட்டார்












Click it and Unblock the Notifications