"உண்மையான இந்தியர் இப்படி எல்லாம் பேச மாட்டார்.." ராகுல் காந்திக்கு குட்டு வைத்த சுப்ரீம் கோர்ட்!
டெல்லி: சீன ஆக்கிரமிப்பு தொடர்பாகக் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது. உண்மையான இந்தியர் யாரும் இதுபோன்ற கருத்தைச் சொல்ல மாட்டார்கள் என்று நீதிபதிகள் காட்டமான விமர்சனத்தை முன்வைத்தனர். அதேநேரம் இந்த விவகாரம் தொடர்பான ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்குகளின் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
ராகுல் காந்தி கடந்த 2022ஆம் ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை "பாரத் ஜோடோ யாத்திரை" மேற்கொண்டார். அப்போது இந்தியாவின் 2,000 சதுர கிலோமீட்டர் பகுதியைச் சீனா ஆக்கிரமித்துள்ளதாகவும், அருணாச்சல பிரதேசத்தில் சீனப் படைகள் இந்திய வீரர்களைத் தாக்குவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இது அப்போது தேசிய அளவில் பேசுபொருள் ஆனது.

உண்மையான இந்தியர்
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "2,000 கி.மீ. நிலப்பரப்பு சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டது என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று காந்தியிடம் கேள்வி எழுப்பியது. மேலும் சுப்ரீம் கோர்ட், "நீங்கள் உண்மையான இந்தியர் என்றால், இப்படிச் சொல்ல மாட்டீர்கள்" என்றும் நீதிபதிகள் காட்டமாக விமர்சித்தனர்.
நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியைக் கடுமையாகக் கண்டித்து. அவர்கள் மேலும், "எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் நீங்கள் ஏன் இப்படிப்பட்ட கருத்துக்களைத் தெரிவிக்கிறீர்கள்? இந்தக் கேள்விகளை நாடாளுமன்றத்தில் ஏன் கேட்கவில்லை?" என்று கேள்வி எழுப்பினர்.
ராகுல் காந்தி விவகாரம்
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு எதிராகப் பலரும் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு சம்மனும் அனுப்பப்பட்டது. தனக்கு எதிரான சம்மன்கள் மற்றும் கிரிமினல் புகாரை எதிர்த்து ராகுல் காந்தி முதலில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், பேச்சு சுதந்திரம் என்பது ராணுவத்தை அவதூறு செய்யப் பொருந்தாது என்று கூறி அலகாபாத் ஐகோர்ட் தள்ளுபடி செய்ததது. அதைத் தொடர்ந்து, அவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
என்ன ஆதாரம் இருக்கு
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், "நீங்கள் அங்கு (எல்லையில்) இருந்தீர்களா? உங்களிடம் நம்பத்தகுந்த ஆதாரம் ஏதேனும் உள்ளதா?" என்றும் கேள்வி எழுப்பினர். அதற்கு ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, "இப்படிப்பட்ட விஷயங்களை அவரால் பேச முடியவில்லை என்றால், எப்படி அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நீதிபதி தத்தா உடனடியாக, "அப்படியானால், ஏன் இதையெல்லாம் நாடாளுமன்றத்தில் பேசக் கூடாது?" என்று பதிலுக்கு கேள்வி எழுப்பினார்.
ராகுல் காந்தி பேச்சுகள்
சீனாவுடனான எல்லைப் பதற்றம் தொடர்பாக பேசும்போது இந்திய ராணுவம் பற்றி ராகுல் காந்தி பல மோசமான கருத்துகளை கூறியதாக உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா என்பவர் குற்றம் சாட்டினார். ராஜஸ்தானில் நடைபெற்ற 2022ல் செய்தியாளர்கலிடம் பேசும்போது, 2,000 சதுர கிலோமீட்டர் இந்தியப் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கூறினார். மேலும் மற்றொரு இடத்தில், இந்தியப் பகுதியை சீனா கைப்பற்றியது.. 20 இந்திய வீரர்களைக் கொன்றது.. அருணாச்சல பிரதேசத்தில் நமது வீரர்களை சீனா தாக்கியது குறித்து மக்களும் இந்திய ஊடகங்களும் மத்திய அரசை கேள்வி கேட்பதில்லை என்று விமர்சித்திருந்தார்.












Click it and Unblock the Notifications