செபி அமைப்பின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம்! மாதபி புரி பூச் பதவிகாலம் இன்றுடன் முடிவு!
டெல்லி: இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியத்தின் (SEBI) புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். செபி அமைப்பின் தற்போதைய தலைவரான மாதபி புரி பூச்சின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய நிதி மற்றும் வருவாய் துறைச் செயலாளராகப் பணியாற்றும் துஹின் காந்த பாண்டே, இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் அமைச்சரவையின் நியமனக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, மேலும் அவர் மூன்று ஆண்டு காலத்திற்கு இந்த பதவியை வகிப்பார் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1987 பேட்ச் ஒடிசா கேடர் ஐஏஎஸ் அதிகாரியான துஹின் காந்த பாண்டே, நிதி அமைச்சகத்தில் வருவாய்த் துறையில் பணியாற்றும் மிக முக்கியமான அதிகாரி. மிகுந்த அனுபவம் வாய்ந்த அதிகாரியான துஹின் காந்த பாண்டே, பல்வேறு அரசுத் துறைகளில் பல முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். அவர் கடந்த செப்டம்பர் 2024 இல் நிதிச் செயலாளராக ஆனார்.
அதற்கு முன்பு, நிதி அமைச்சகத்தின் கீழ் வருவாய்த் துறையை வழிநடத்தினார். அதற்கு முன்னதாக பொது நிறுவனங்கள் துறை (DPE), பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை (DIPAM) ஆகியவற்றில் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
செபி தலைவராக இருந்து வரும் மாதபி புரி பூச்சின் பதவிக்காலம் பிப்ரவரி 28 ஆம் தேதியான இன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே பொறுப்பேற்க உள்ளார். மாதபி பூரி பூச் கடந்த மார்ச் 2, 2022 அன்று பொறுப்பேற்றபோது, பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற முதல் பெண்மணி என்ற சிறப்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பண முறைகேடு, பங்குச்சந்தை மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் அதானி குழுமம் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு ஹிண்டன்பெர்க் குற்றம்சாட்டியது. அதானி குழும நிறுவனங்களின் முறைகேடுகளில் செபி தலைவர் மாதபி புரி பூச் மற்றும் அவரது கணவருக்கும் தொடர்பு இருந்ததாகவும் ஹிண்டன்பெர்க் குற்றம்சாட்டியது.
அதானி குழுமம் தொடர்பான முறைகேடு விசாரணையில் மாதவி ஒருதலைபட்சமாக செயல்பட்டதாகவும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றம்சாட்டியது. எனினும் இந்தக் குற்றச்சாட்டுகளை மாதபி புரி பூச் மறுத்திருந்தார். இந்நிலையில் அவரது பதவி காலம் நீட்டிக்கப்படாமல் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications