உச்ச நீதிமன்றத்திலேயே இல்லையே.. புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்
டெல்லி: தமிழக வெற்றிக் கழகத்தின்பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர், தங்களது முன்ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் இன்னும் மேல்முறையீடு செய்யவில்லை. பொதுவாக, ஒரு வழக்கை விசாரிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை முதலில் தாக்கல் செய்ய வேண்டும், அதன் பின்னரே அது பொருத்தமான அமர்வுக்கு முன் விசாரணைக்குப் பட்டியலிடப்படும். ஆனால், இந்த வழக்கில் இதுவரை எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ம் தேதி பங்கேற்ற பிரசார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணைப் பொதுச்செயலர் நிர்மல் குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜோதிராமன் முன்பு கடந்த அக்டோபர் 3ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல்கள் திருவடிக்குமார், ரவி ஆகியோர் ஆஜராகி, மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை கடுமையாக பாதிக்கப்படும். எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டனர்.
பின்னர் மனுதாரர் வக்கீல்கள் ஆஜராகி, சம்பவம் திட்டமிட்ட செயல் அல்ல என்றும் ஆனால் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த கூட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். இதன் காரணமாகவே கூட்ட நெரிசல் ஏற்பட்டது என வாதிட்டனர். இதற்கு அரசு வக்கீல்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர்கள் வாதிடுகையில், மனுதாரர்களின் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும், சாட்சியும் கிடையாது. இது போன்ற குற்றச்சாட்டுகளை ஏற்க இயலாது என அதிருப்தி தெரிவித்தார்கள்.
பின்னர் புஸ்ஸி, நிர்மல்குமாரின் வக்கீல்கள், கட்சியின் பொதுச்செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்தது ஏற்புடையதல்ல என்றார்கள். அதற்கு நீதிபதி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எனும்போது அதற்கான பொறுப்பு வேண்டும்தானே? என கேள்வி எழுப்பினார். பின்னர் மனுதாரர் வக்கீல்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன். அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்றனர்.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜோதிராமன், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் இறந்த துயரமான சம்பவம் நடந்து சில நாட்கள்தான் ஆகிறது. இது தொடர்பான விசாரணை தொடக்க நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும். எனவே மனுதாரர்களின் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவானதாக தகவல்கள் பரவின. அவர்கள் விரைவில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஏனெனில் பொதுவாக உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் அளிக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
இந்நிலையில் இன்று காலை பல்வேறு ஊடகங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின்பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தவெக இணைச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர், தங்களது முன்ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், அவர்களின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வர உள்ளதாகவும் செய்திகள் வெளியிட்டன. ஆனால் டெல்லி வட்டாரங்களில் விசாரித்தால். சி.டி.ஆர். நிர்மல் குமார், புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் இன்னும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை என்று கூறுகிறார்கள். இன்று காலை வரையில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றும், எனவே மனு இன்று விசாரணைக்கு வருவது சந்தேகம் என்றும் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications