"வயதிற்கு வந்தவுடன் திருமணம்!அதுதான் சரி"..3 மாதத்தில் உ.பி. தேர்தல்.. சமாஜ்வாதி எம்பிக்கள் சர்ச்சை
டெல்லி: பெண்ணின் திருமண வயதை 18லிருந்து 21 ஆக மத்திய அரசு உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாதி கட்சிகளை சேர்ந்த இரு எம்பிக்கள் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் திருமண வயது 18ஆக இருந்தது. இதை 21 ஆக மாற்றும் சட்டமசோதாவிற்கு நேற்று முன் தினம் ஒப்புதல் கிடைத்தது. பெண்ணின் திருமண வயது 18 என இருந்த போதிலும் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வந்தன.
இதனால் பெண் பூப்படைந்தவுடன் திருமணம் செய்து விடும் அவலம் இந்தியாவில் இருந்தது. இதனால் பெண்ணின் கல்வியும் உடல்நிலையும் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் 13 வயது பெண்ணிற்கு அவரை விட இரு மடங்கு அல்லது இரண்டரை மடங்கு வயதில் மூத்தவர்களை திருமணம் செய்து வைக்கும் நிலையும் இருந்து வந்தது..

சமாஜ்வாதி கட்சி
இந்த நிலையில்தான் இதற்கெல்லாம் மத்திய அரசு நேற்று முன் தினம் சட்டமாக இயற்றி முற்றுப்புள்ளியை வைத்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு பெரும்பாலானோர் வரவேற்றுள்ள நிலையில் சமாஜ்வாதி கட்சியின் எம்பிக்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

எம்பி
இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்பி சையது டஃபைல் ஹாசன் கூறுகையில் வயதிற்கு வந்தவுடன் பெண் திருமணம் செய்து கொள்ளப்பட வேண்டும். பெண்ணிற்கு குழந்தை பிறப்பானது 16 -17 முதல் 30 வயது வரைதான் இருக்கும். எனவே திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கும் படலங்களை பெண்ணின் 16 வயதிலேயே தொடங்கிவிட வேண்டும்.

இரு தீமைகள்
ஒருவேளை திருமணம் தாமதமானால், இரு தீமைகள் உள்ளன. ஒன்று குழந்தை பெற்றுக் கொள்வதில் பிரச்சினை ஏற்படும். இரண்டாவது அப்படியே குழந்தை பிறந்தாலும் பெற்றோரின் வயது மூப்பால் குழந்தைகள் வாழ்க்கையில் ஒரு நிலையை அடைவதிலும் பிரச்சினை இருக்கும். கடைசி காலத்தில் இருக்கும் போது உங்கள் குழந்தைகள் மாணவர்களாகவே இருப்பர்.
|
பெண்ணின் வயது
பெண்ணின் திருமண வயதை உயர்த்தியதன் மூலம் நாம் இயற்கையை மீறியுள்ளோம். எனவே ஒரு பெண் வயதிற்கு வந்தவுடனே அவர் குழந்தை பிறக்கும் தன்மையை அடைகிறார். எனவே அந்த வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட வேண்டும். உதாரணமாக 16 வயதில் ஒரு பெண் பூப்படைந்து விட்டால் அதே வயதில் திருமணமும் செய்து வைக்க வேண்டும்.

ஓட்டும் போடும் போது
18 வயதில் ஒரு பெண் ஓட்டு போடும் போது ஏன் அதே வயதில் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார். அது போல் சமாஜ்வாதி கட்சியின் மற்றொரு எம்பியான ஷாபிகர் ரஹ்மான் பார்க் கூறுகையில் இந்தியா ஏழை நாடு. சிறிய வயதிலேயே தங்களது பெண் குழந்தைகளை திருமணம் செய்து வைத்துவிடதான் பெற்றோர் விரும்புவர்.

மசோதா
இந்த திருமண வயது திருத்த மசோதாவை நான் ஆதரிக்க மாட்டேன் என்றார். இதுகுறித்து கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில் எங்கள் கட்சி முற்போக்குத்தனமானது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக நிறைய திட்டங்களை தொடங்கியுள்ளோம். அந்த இரு எம்பிக்களின் கருத்தில் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications