விடுதலைப் புலிகள் தடை நீட்டிப்பு வழக்கில் ஒரு தரப்பாக சேர்க்க வைகோ மனு- டெல்லி தீர்ப்பாயம் ஏற்பு!
டெல்லி: தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் தம்மையும் ஒருதரப்பாக சேர்க்க வலியுறுத்தி டெல்லி தீர்ப்பாயத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் (மதிமுக) வைகோ எம்பி மனு அளித்துள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து ம் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அண்மையில் அரசாணை வெளியிட்டிருந்தது.
இது தொடர்பாக மதிமுக தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கை: தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் Unlawful Activities (Prevention) Act (UAPA படி, சட்ட விரோத அமைப்பாக அறிவித்து, ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடையை14.05.2024 அன்று , மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியிட்டது.

அந்தத் தடை அறிவிப்பின்படி, முகாந்திரங்களை ஆராய்ந்து முடிவு செய்ய, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டப்படி, டெல்லி உயர்நீதிமன்ற நீதியரசர் மன்மீத் பிரிட்டம் சிங் அரோரா (Justice Manmeet Pritam Singh Arora) அவர்கள் தலைமையில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட தீர்ப்பாயத்தை அமைத்து 05.06.2024 அன்று மத்திய அரசு மீண்டும் அடுத்த அரசாணை வெளிட்டது.
அத்தீர்ப்பாயம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப்படி, விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்யப்பட்ட அமைப்பாக ஏன் அறிவிக்க கூடாது? விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ 23.07.2024 மாலை 4 மணிக்கு இத்தீர்ப்பாயத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
அதன் அடிப்படையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ சார்பில், இந்தத் தீர்ப்பாயத்தில், விடுதலைப்புலிகள் அமைப்புக்கு, இந்தியாவில் தடை விதிக்க முகாந்திரம் இல்லை. ஆகவே, அந்த அமைப்புக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை, இந்திய அரசு இரத்து செய்ய வேண்டுமென்றும், வழக்கில் தன்னை ஒரு தரப்பினராக சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் 23.07.2024 மாலை டெல்லியில் தீர்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
வைகோ தாக்கல் செய்த மனுவை தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டது. ஆகஸ்டு 7 ஆம் தேதிக்கு விசாரணை ஓத்தி வைக்கப்பட்டது. கடந்த ஒவ்வொரு ஐந்தாண்டுகளிலும் இதே போன்ற மனுவை வைகோ நீதிமன்ற தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்து இருந்தார்.












Click it and Unblock the Notifications