"ரத்தன் டாடா இல்லை என்பதை மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது.." ஆனந்த் மகிந்திரா நெகிழ்ச்சி பதிவு
டெல்லி: டாடா குழுமத்தின் தலைவரும், இந்தியாவின் மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவருமான ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 86. நாட்டின் பல்வேறு முக்கிய தொழிலதிபர்களும் ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக ஆனந்த் மகிந்திரா நெகிழ்ச்சியான இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் மிக முக்கிய தொழிலதிபரான ரத்தன் டாடா கடந்த சில நாட்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை பாதிப்பு மோசமான நிலையில், அவர் நேற்றிரவு காலமானார்

அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே நாட்டின் மற்றொரு முக்கிய தொழிலதிபரான ஆனந்த் மகிந்திரா உருக்கமான பதிவைப் பகிர்ந்துள்ளார். ரத்தன் டாடா இந்த உலகில் இல்லை என்பதை மனம் ஏனோ ஏற்க மறுப்பதாக அவர் பதிவிட்டுள்ளார்.
மனம் ஏற்க மறுக்கிறது: அவர் தனது ட்விட்டரில் மேலும், "ரத்தன் டாடா இல்லாததை மனம் ஏற்க மறுக்கிறது. இந்தியப் பொருளாதாரம் ஒரு வரலாற்றுப் பாய்ச்சலின் உச்சியில் நிற்கிறது. ரத்தனின் வாழ்க்கையும் அவர் செய்த பணியும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.. இந்த கட்டத்தில் அவரது வழிகாட்டுதல் விலைமதிப்பற்றதாக இருக்கும்.
அவர் இப்போது காலமாகிவிட்டார். அவரை நாம் முன்மாதிரி கொண்டு அவரது பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அவர் தனது செல்வத்தில் பெரும்பகுதியை சமூக சேவைக்காகவே செலவழித்தவர்.. குட் பை மிஸ்டர் டாடா.. உங்களை மக்கள் மறக்க மாட்டார்கள். ஏனென்றால் மிகப் பெரும் தலைவர்கள் எப்போதும் இறப்பதில்லை... ஓம் சாந்தி" என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
அதானி: அதேபோல அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தனது ட்விட்டரில், "நவீன இந்தியாவின் பாதையை மறுவரையறை செய்த தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு மாபெரும் நபரை இந்தியா இழந்துவிட்டது. ரத்தன் டாடா ஒரு தொழிலதிபர் மட்டுமல்ல.. அவர் இந்தியாவின் உணர்வான ஒருமைப்பாடு, இரக்கம் மற்றும் சமூக சேவை ஆகியவற்றுக்காக அறியப்படுவார். அவரை போன்ற ஒரு நபரை நமது சமூகம் எப்போதும் மறந்துவிடாது. . ஓம் சாந்தி" என்று பதிவிட்டுள்ளார்.
அம்பானி: அதேபோல முகேஷ் அம்பானி, "இந்தியாவிற்கும் இது மிகவும் சோகமான நாள். ரத்தன் டாடாவின் மறைவு டாடா குழுமத்திற்கு மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியருக்கும் மிகப் பெரிய இழப்பு. தனிப்பட்ட முறையில், ரத்தன் டாடாவின் மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. நான் அவருடன் பேசும் போது எல்லாம் அவரது மனித நேயம், இரக்கம் ஆகியவை அவர் மீதான மரியாதையை அதிகரித்தது. சமூகத்தின் மீது எப்போதும் மிகப் பெரிய அக்கறை கொண்ட தொழிலதிபர் தான் ரத்தன் டாடா.
இதயத்தில் இருப்பீர்கள்: இந்தியா இப்போது தனது சிறந்த மற்றும் இரக்கம் கொண்ட ஒருவரை இழந்துவிட்டது. டாடா இந்தியாவை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றவர்.. உலகின் சிறந்ததை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர்.. 1991ல் அவர் டாடா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற போது இருந்ததை விட டாடா குழுமத்தை 70 மடங்கு பெரிய நிறுவனமாக மாற்றியவர் டாடா.. ரத்தன், நீங்கள் எப்போதும் எங்கள் இதயத்தில் இருப்பீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications