கடைசி முழு மத்திய பட்ஜெட் ‘ரெடி’.. இன்று அல்வா கிண்டுகிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இன்று நிதி அமைச்சர் அல்வா கிளறி வழங்கவுள்ளார்.
டெல்லி : ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக அல்வா கிண்டுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், இன்று அல்வா கிண்டும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அல்வா கிளறி பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டவர்கள், நிதி அமைச்சக பணியாளர்களுக்கு வழங்க உள்ளார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த ஆண்டு பட்ஜெட்டில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

பட்ஜெட் தயார்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த சில நாட்களாக நிதி அமைச்சக பணியாளர்கள் உள்ளிட்ட குழுவினர்களுடன் பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். பட்ஜெட் தயாரிப்பதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதைக் குறிக்கும் வகையில் இன்று அல்வா தயாரிப்பு நிகழ்வு நடத்தப்படுகிறது.

கடைசி முழு பட்ஜெட்
வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தாக்கல் செய்யும் முழு நிதியாண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும். 2024-ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

பட்ஜெட்டில் சலுகைகள்
எனவே, இந்த பட்ஜெட்டில் கூடுதல் சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதி ஆயோக் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன் கலந்தாலோசித்து நிதி அமைச்சகம் பட்ஜெட்டை தயாரித்துள்ளது. ஒவ்வொரு துறையிலும் என்னென்ன தேவைகள் உள்ளன பொதுமக்களிடையே என்னென்ன எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன என்பதை ஆய்வு செய்து அதனை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

அல்வா கிண்டும் நிகழ்வு
நாடாளுமன்றத்தின் நார்த் பிளாக்கில் இந்த அல்வா கிண்டும் நிகழ்வு நடைபெறும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரிய கடாயில் அல்வாவை கிளறி சக நிதி அமைச்சக பணியாளர்களுக்கு இன்று பரிமாற உள்ளார். அல்வா கிண்டும் நிகழ்ச்சி முடிந்த பின்னர் தான் பட்ஜெட் தொடர்பான அச்சுப் பணிகள் தொடங்கும்.

அச்சிடும் ஊழியர்கள்
பட்ஜெட் அச்சிடும் பணி நடைபெறும்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். பட்ஜெட்டில் உள்ள எந்த ஒரு தகவலும் லீக் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அச்சிடும் ஊழியர்கள் அச்சகத்திலேயே தங்கி விடுவார்கள். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் வாசிக்கப்படும்போதுதான் அவர்கள் அச்சகத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு அல்வா தயாரிக்கும் விழா நடைபெறவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் அல்வா தயாரிக்கும் விழா இன்று நடத்தப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, எம்.பி.க்கள் மற்றும் பொதுமக்கள் பட்ஜெட் ஆவணங்களை சிரமமின்றி அணுக யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications