மாஸ் காட்டும் உத்தர பிரதேசம்.. ஜேவாரில் செமி கண்டக்டர் ஆலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லி: உத்தர பிரதேசத்தின் ஜேவார் என்னும் இடத்தில் இந்தியாவின் 6வது செமிகண்டக்டர் ஆலையை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜேவாரில் சர்வதேச விமான நிலையம் அருகில் இந்த செமிகண்டக்டர் ஆலை அமைய இருக்கிறது. தொழில் துறையில் ஏராளமான முதலீடுகளை ஈர்த்து வருகிறது உத்தர பிரதேசம்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், ரூ.1.25 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் ரூ.3,706 கோடியில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. HCL, ஃபாக்ஸ்கான் பார்ட்னர்ஷிப்பில் உத்தர பிரதேசத்தில் செமி கண்டக்டர் மையம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மொபைல் போன்கள், லேப்டாப், வாகனங்கள் மற்றும் இதர கருவிகளுக்கான டிஸ்ப்ளே டிரைவர்கள் சிப்கள் தயாரிக்கப்படும். உத்தர பிரதேசத்தில் அமையும் இந்த மையத்தில் மாதம் 3.6 கோடி சிப்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹெச்சிஎல் மற்றும் பாக்ஸ்கான் கூட்டணியில் உருவாகும் இந்த ஆலையில் 2027ஆம் ஆண்டில் இருந்து உற்பத்தியை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கட்டப்பட்டு வரும் 5 செமிகண்டக்டர் தயாரிப்பு ஆலைகள் பணி முடியும் நிலையில் உள்ளது. இந்நிலையில் 6வது செமி கண்டக்டர் ஆலை ஜேவாரில் அமைக்கப்படுகிறது.
மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "உத்தர பிரதேச மாநிலம் ஜெவாரில் அமைக்கப்படும் ஆறாவது செமி கண்டக்டர் ஆலைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது டிஸ்ப்ளே டிரைவர் சிப்களை தயாரிப்பதற்கான HCL மற்றும் Foxconn நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும்.
ஃபாஸ்கான் செமி கண்டக்டர் யூனிட் அங்கு வந்தவுடன், டிஸ்பிளே போர்டு ஆலையும் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கிறோம். இது இந்தியாவின் திறனில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்யும். இது ஒரு பெரிய ஆலை. இது உலகின் பிற பகுதிகளுக்கான ஃபாக்ஸ்கானின் தேவைகளையும் பூர்த்தி செய்யும்.
HCL-Foxconn ஆலை 2027 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும். இந்த ஆலை 2,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மின்னணு உற்பத்தித் துறையில் தற்போது சுமார் 25 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் 2012 ஆம் ஆண்டு வரை 2 சர்வதேச விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஜேவாரில் நொய்டா சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது உத்தர பிரதேசத்தின் ஐந்தாவது சர்வதேச விமான நிலையம்.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசு, சமீப காலமாக தொழில்துறையில் நிறைய முதலீடு செய்து வருகிறது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. மத்திய அரசு செமிகண்டக்டர் துறையில் அக்கறை காட்டும் நிலையில், இந்த துறையில் இந்தியா மிகப்பெரிய அளவில் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications