கூகுள் பே - போன் பேயில் ரூ.2000க்கு மேல் மாற்றினால் 5% ஜிஎஸ்டி? நிர்மலா சீதாராமன் பரிசீலனை
டெல்லி: யுபிஐ பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலம் நாம் அனைவரும் வங்கிகளுக்கு செல்லாமல் எளிதாக பணப்பரிமாற்றம் செய்து வருகிறோம். இந்நிலையில் தான் போன்பே, கூகுள் பே, பேடிஎம் உள்பட அனைத்து யுபிஐ செயலிகளிலும் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் பணப்பரிமாற்றம் செய்யும்பட்சத்தில் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பது பற்றி மத்திய நிதி அமைச்சகம் தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்போது நாம் அனைவரும் பணம் எடுக்கவும், பணம் செலுத்தவும் அதிகமாக வங்கிகளுக்கு செல்வது இல்லை. பணம் எடுக்க ஏடிஎம் கார்டுகளை நாம் இதற்கு முன்பு அதிகம் பயன்படுத்தினோம். இப்போது பணம் கையில் எடுக்காமல் எந்த கடைகளுக்கு சென்றாலும் கூட யுபிஐ செயலிகள் மூலம் நாம் பணம் செலுத்தும் வசதி உள்ளது. இதனால் நம் கைகளில் அதிகமாக பணம் என்பது வைத்திருப்பது இல்லை.

சாதாரண பெட்டிக்கடை முதல் பெரிய பெரிய மாலில் இருக்கும் கடைகள் வரை அனைவரும் யுபிஐ மூலம் மக்களிடம் பணம் பெற தொடங்கிவிட்டனர். அதேபோல் பொதுமக்களும் பெரும்பாலானவர்கள் யுபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதற்கிடையே தான் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தற்போது வரை யுபிஐ செயலிகளான போன்பே, கூகுள்பே, பேடிஎம் உள்பட பிற செயலிகளில் நாம் பணப்பரிமாற்றம் செய்யும்போது வரி எதுவும் செலுத்த வேண்டிய தேவையில்லை. ஆனால் இனி வரும் காலத்தில் யுபிஐ பணப்பரிமாற்றத்துக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
அதன்படி அனைத்து யுபிஐ செயலிகளிலும் ரூ.2 ஆயிரத்துக்கு அதிகமான பணப்பரிமாற்றத்துக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கும் திட்டம் மத்திய நிதி அமைச்சகம் வசம் உள்ளது. இதுபற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் தரப்பில், ‛‛மத்திய அரசு யுபிஐ பணப்பரிவர்த்தனையை ஜிஎஸ்டி எனும் மறைமுக வரியில் சேர்க்க பரிசீலனை செய்து வருகிறது. இதன்மூலம் ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளது. அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு முன்பாக இதுபற்றி மத்திய நிதி அமைச்சர் (நிர்மலா சீதாராமன்) இறுதி முடிவு எடுக்க உள்ளார்'' என்றனர்.
அதாவது கிரெடிட் கார்டு, பிஓஎஸ் பணப்பரிவர்த்தனைகளில் வரி பிடிப்பது போல் யுபிஐ பணப்பரிவர்த்தனையிலும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன்மொழியை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் உயர் அதிகாரிகள் முன்வைத்துள்ளனர். இதுபற்றி பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இது பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கும் என்பதால் சில சலுகைகளும் அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதன்படி ஒருவர் யுபிஐ செயலி மூலம் அப்பா, அம்மா, சகோதரர், சகோதரி, உறவினர், நண்பர்களுக்கு பணம் அனுப்பும்போது எந்த வரியும் வசூலிக்க வேண்டாம். மாறாக ஆன்லைனில் கடைகளில் பொருட்கள் வாங்கி பணம் செலுத்துவது அல்லது ஆன்லைனில் பொருட்கள் வாங்க பணம் செலுத்துவது உள்ளிட்டவற்றுக்கு மட்டும் 5 சதவீத ஜிஎஸ்டி வரியை விதிக்கலாம் என்பது பரிசீலனையில் உள்ளது. இதன்மூலம் மக்களின் எதிர்ப்பை ஓரளவு சமாளிக்கலாம் என்று மத்திய அரசு கணக்கிடுகிறது.
இருப்பினும் மத்திய அரசின் இந்த திட்டம் என்பது நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே வருமான வரி, எந்த பொருட்களை வாங்கினாலும் வரி, பிரியாணி சாப்பிட்டாலும் கூட வரி செலுத்த வேண்டி உள்ளது. இப்படியான சூழலில் தான் நம் பணத்தை யுபிஐ செயலி மூலம் இன்னொருவருக்கும் மாற்றவும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டுமா? என்று கவலையையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனை காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜெய்ராம் ரமேசும் விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மத்திய அரசு வலியுறுத்தியது. இப்போது வரி விதிக்க முடிவு செய்துள்ளது. உண்மையிலேயே இந்த அரசு யூ டர்ன் போடுவதில் தேர்ச்சி பெற்றுள்ளது. இது நடுத்தர மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்'' என்று கிண்டல் செய்து விமர்சனம் செய்துள்ளது. அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா கூறுகையி்ல, ‛‛டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் நம் நாடுமுன்னேற்றம் அடைந்துள்ளது. இப்படியான வரி விதிப்பு டிஜிட்டல் பணபரிவர்த்தனையின் முன்னேற்றத்தை குறைக்கும். இது டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு எதிரானது'' என்று விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications