கள்ளநோட்டு புழக்கத்தில் விடுவதும் பயங்கரவாத செயல் தான்.. மத்திய அரசின் புதிய மசோதா சொல்வது என்ன?
டெல்லி: இந்திய தண்டனை சட்டம் என்பது பாரதிய நியாய சன்ஹிதா என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்கான திருத்தப்பட்ட மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்தியாவில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதும் பயங்கரவாத செயல் எனவும், பெண்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துவது என்பது கொடுமை என கருதி தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் உள்ளிட்டவை நடைமுறையில் உள்ளன. போலீஸ், நீதிமன்றம், பாதுகாப்பு அமைப்புகள் இந்த சட்டத்தை பயன்படுத்தி தான் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க செய்கிறது.

இந்நிலையில் தான் இந்த 3 சட்டங்களும் காலணித்துவத்தை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளதாகவும், இதன் பெயர்களை மாற்றம் செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்திய தண்டனை சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் என அழைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான புதிய மசோதாக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தார். அதன்படி இந்திய தண்டனை சட்டத்துக்கு பதில் பாரதிய நியாய சன்ஹிதா, குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு பதில் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, இந்திய சாட்சிய சட்டத்திற்குப் பதில் பாரதிய சாக்சியா என பெயர் மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் பல சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டது.
இதுதவிர ஒவ்வொரு குற்றத்துக்கான கைது நடவடிக்கை, விசாரணை முறை, தண்டனை முறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான மசோதா கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார். அதன்பிறகு இதில் மீண்டும் திருத்தங்கள் செய்யப்பட்டு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் தான் மூன்று மசோதாக்களில் திருத்தப்பட்ட பிஎன்எஸ் எனும் பாரதிய நியாய சன்ஹிதா இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தார். அதன்படி 113வது பிரிவு என்பது இந்தியாவின் பொருளாதாரத்துக்கான அச்சுறுத்தல் குறித்த சட்டப்பிரிவுகளை உள்ளடக்கி உள்ளது.
அதன்படி இந்தியாவின் பொருளாதாரத்துக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவது, உயிரிழப்புகளை ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றை செய்தால் பயங்கரவாத செயல் எனக்கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரிவில் கைது செய்யப்படுவோருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் உடந்தையாக இருப்பவர்களுக்கும் சிறை தண்டனை கிடைக்க இந்த பிரிவு வழிவகுக்கிறது.
இதுதவிர திருத்தப்பட்ட மசோதாவில் பெண்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துவது என்பதும் கொடுமைப்படுத்துவதன் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரிவு 85ன் படி இந்த நடவடிக்கையில் ஈடுபடும் கணவன் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்கப்பட வாய்ப்புள்ளது என கடந்த ஆகஸ்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் அதில் பெண்களுக்கு எதிரான கொடுமை என்ன? என்பது பற்றிய விளக்கம் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது அதற்கான விளக்கம் என்பது சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர திருத்தப்பட்ட பிரிவு 86 என்பது பெண்களுக்கு எதிரான கொடுமை என்பது அவர்களை தற்கொலைக்கு தூண்டுவது, கொடூர காயத்தை ஏற்படுத்துதல், உடல் மற்றும் மன உளைச்சலை கொடுப்பது என விவரிக்கிறது.
மேலும் திருத்தப்பட்ட இந்த சட்டப்பிரிவுகளின்படி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரின் அடையாளத்தை அவர்களின் அனுமதியின்றி நீதிமன்ற நடவடிக்கைகளில் வெளிப்படுத்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூட நாடாளுமன்ற குழுவின் 2 முக்கிய பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கவில்லை.
அதாவது விபசாரம் மற்றும் ஓரினச்சேர்க்கை ஆகியவற்றை குற்றமாக்க பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் என்பது இந்த பரிந்துரைக்கு எதிரானதாக உள்ளது. இதனால் இதனை சட்டமாக்கினால் எதிர்ப்புகள் கிளம்பும் என்பதால் மத்திய அரசு அதனை கைவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications