அய்யா சாமீகளா.. கோதுமை மாவையும் விட்டு வைக்காத ‘பாரத்’- மத்திய அரசு என்ன செய்திருக்கிறது தெரியுமா?
டெல்லி: நாட்டின் கோதுமை பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் மானிய விலையில் (மலிவு விலை) கோது மாவு விற்பனையை மத்திய அரசு தொடங்கி உள்ளது. டெல்லியில் மானிய விலையில் கோதுமை மாவு விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த கோதுமை மாவுக்கு மத்திய அரசு வைத்த பெயர் "பாரத் ஆட்டா" ('Bharat' Atta).
இது தொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்ட அறிக்கை: மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், 'பாரத்' பிராண்டின் கீழ் கோதுமை மாவு (ஆட்டா) விற்பனை செய்வதற்கான 100 நடமாடும் வேன் வாகனங்களைப் டெல்லியில் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதில் கோதுமை மாவு ஒரு கிலோவுக்கு ரூ. 27.50-க்கு மிகாமல் சில்லறை விலையில் கிடைக்கும்.

சாதாரண நுகர்வோரின் நலனுக்காக மத்திய அரசு எடுத்துள்ள தொடர் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். 'பாரத்' பிராண்ட் ஆட்டாவின் சில்லறை விற்பனையைத் தொடங்குவது சந்தையில் மலிவு விலையில் விநியோகத்தை அதிகரிக்கும். மேலும் இந்த முக்கியமான உணவுப் பொருளின் விலை குறைய உதவும்.
'பாரத்' ஆட்டா இன்று முதல் கேந்திரிய பந்தர், நாஃபெட் மற்றும் என்.சி.சி.எஃப் ஆகியவற்றின் அனைத்து கடைகள் மற்றும் நடமாடும் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும். அத்துடன் பிற கூட்டுறவு, சில்லறை விற்பனை நிலையங்களுக்கும் இதன் விற்பனை விரிவுபடுத்தப்படும்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது: மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகளால் அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்குள் உள்ளது. தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையைக் குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக மத்திய அரசு கேந்திரிய பந்தர், நாஃபெட் மற்றும் என்.சி.சி.எஃப் மூலம் ஒரு கிலோ பாரத் பருப்பை ரூ. 60 க்கு வழங்குகிறது.

இந்த முயற்சிகள் அனைத்தும் விவசாயிகளுக்கு பெரும் பயனளித்துள்ளன.
விவசாயிகளின் விளைபொருட்களை மத்திய அரசு கொள்முதல் செய்து, அதன் பின்னர், நுகர்வோருக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, நுகர்வோருக்கும் விவசாயிகளுக்கும் உதவ வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளார். இவ்வாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications