குட் நியூஸ்...தமிழ்நாட்டின் எந்த கோவில்களை எல்லாம் மத்திய அரசு மேம்படுத்த திட்டமிட்டுள்ளது தெரியுமா?
டெல்லி: தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள நவக்கிரக ஸ்தலங்கள் மேம்படுத்தப்படவுள்ளன. திங்களூர் கைலாச நாதர் கோயில், ஆலங்குடி குருபகவான் கோயில், திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில் உள்ளிட்டவைகளை மத்திய அரசின் பிரசாத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.
லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அளித்த பதில்: நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. சுதேசி தர்ஷன் 2.0 மற்றும் பிரசாத் எனப்படும் யாத்திரை புத்துயிர் ஊட்டல் மற்றும் ஆன்மீக, பாரம்பரிய, வசதிகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய 2 திட்டங்களின் கீழ் மொத்தம் 52 பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 9 பெரிய பணிகள் முடிவடைந்துள்ளன.

பிரசாத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள நவக்கிரக ஸ்தலங்கள் மேம்படுத்தப்படவுள்ளன. திங்களூர் கைலாச நாதர் கோயில், ஆலங்குடி குருபகவான் கோயில், திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில், திருவிடை மருதூர் சூரியனார் கோயில், கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில், வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் ஆலயம், கீழப்பெரும்பள்ளம் நாகநாதஸ்வாமி கோயில், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் ஆகியவற்றில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இது தவிர சுதேசி தர்ஷன் 2.0 திட்டத்தின் கீழ் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில் மேம்படுத்தப்பட உள்ளது. இதே போன்று புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்காலில் உள்ள நவகிரக ஸ்தலமான தர்பாரண்யேஸ்வரர் கோயில் மற்றும் ஆன்மீக பூங்கா ஆகியவை மேம்படுத்தப்படவுள்ளன. மேலும், சவால் அடிப்படையிலான ஸ்தல மேம்பாடு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தஞ்சாவூர், புதுச்சேரியில் ஒயிட் டவுன் மற்றும் ஆன்மீக ஸ்தலங்கள் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் தீவு பகுதிகளும் மேம்படுத்தப்பட உள்ளன.
வலிமையான கிராம ஸ்தலங்கள் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் நீலகிரி மற்றும் மாமல்லபுரமும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால் நகரங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நூலகங்கள் மேம்பாட்டுக்கு ரூ10 கோடி: மேலும் மத்திய கலாச்சார துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான ராஜா ராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளை மூலம் நாடு முழுவதும் உள்ள நூலகங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள நூலகங்களுக்கு 2019-20 நிதியாண்டில் ரூ. 1.74 கோடியும், 2020-21 நிதியாண்டில் ரூ. 79 லட்சமும், 2021-22 நிதியாண்டில் ரூ. 1.68 கோடியும், 2022-23 நிதியாண்டில் ரூ. 80 லட்சமும், 2023-24 நிதியாண்டில் ரூ. 1.44 கோடியும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
ராஜா ராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளை மூலம் பொது நூலகங்கள் நவீன மயத்திற்கு தமிழ்நாட்டில் 401 நூலகங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய நூலக இயக்கத்தின் கீழ், மாதிரி நூலகம் அமைப்பதற்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட நூலகத்திற்கு 2023-24-ம் நிதியாண்டில் 97.37 லட்சம் ரூபாயும், வேலூர் மாவட்ட நூலகத்திற்கு 91.11 லட்சம் ரூபாயும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்காலில் உள்ள டாக்டர் எஸ் ஆர் ரங்கநாதன் அரசு பொது நூலகத்திற்கு ரூ. 87.02 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
கலாச்சார துறையால் மாதிரி நூலகமாக அடையாளம் காணப்பட்டுள்ள தஞ்சாவூர் மகராஜா சரபோஜி சரஸ்வதி மகால் நூலகத்திற்கு ரூ. 6 கோடியே 67 லட்சம் விடுவிக்கப்பட்டிருக்கிறது.
வரலாற்று சின்னங்கள்: தமிழகம் மற்றும் புதுச்சேரி வட்டத்தில் உள்ள நினைவுச் சின்னங்களை பராமரிக்க 2021-22 முதல் இம்மாதம் 15-ம் தேதி வரை 35 கோடியே 39 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளன. திருச்சி வட்டத்தில் உள்ள நினைவு சின்னங்களை பராமரிக்க 23 கோடியே 8 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications