இந்தியாவில் எத்தனை பேர் ஓமிக்ரானில் இருந்து குணமடைந்துள்ளனர்? மத்திய அரசு வெளியிட்ட அதிமுக்கிய தகவல்
டெல்லி: இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதில் எத்தனை பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்தது. இந்தச் சூழ்நிலையில், கடந்த நவ. மாதம் தென் ஆப்பிரிக்காவில் புதிய ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இது புதிய ஓமிக்ரான் நிலைமையை அப்படியே புரட்டிப்போட்டது. அதன் பின்னரே உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா கேஸ்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.

புதிய கட்டுப்பாடுகள்
இதன் காரணமாக உலக நாடுகள் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள போதிலும் அது பெரியளவில் பலன் அளிப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவிலும் அதேபோல கூடுதல் கட்டுப்பாடுகள் போடப்பட்டன. ஆபத்தான நாடுகளில் இருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அப்படி வெளிநாடுகளில் இருந்து திரும்பிய பலருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்தியாவில் ஓமிக்ரான்
முதலில் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் இருவருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பிறகு குஜராத், டெல்லி என பல்வேறு மாநிலங்களிலும் ஓமிக்ரான் பாதிப்பு அதிகமானது. தமிழ்நாட்டில் கடந்த 20 நாட்களில் கொரோனா உறுதி ஆனவர்களின் மரபணு வரிசைப்படுத்தல் சோதனை முடிவுகள் நேற்று வெளியானது. அதில் மொத்தம் 30 பேருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை சுமார் 300க்கும் மேற்பட்டோருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

மருத்துவர்கள் தகவல்
இருப்பினும், உண்மையில் ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்றே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஓமிக்ரான் பாதிப்பு டெல்டாவை காட்டிலும் குறைந்தபட்சம் 3 மடங்கு வேகமாகப் பரவும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேநேரம் தற்போது வரை வெளியான தரவுகளை வைத்துப் பார்க்கும்போது ஓமிக்ரான் லேசான பாதிப்புகளை ஏற்படுத்துவதுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குணமடைந்த 104 பேர்
இந்நிலையில், இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 104 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஓமிக்ரான் வைரசால் பாதிக்கப்படுவோருக்கு பெரும்பாலும் மருத்துவச் சிகிச்சை கூட தேவைப்படுவதில்லை. சுய தனிமையில் இருப்பதன் மூலமே ஓமிக்ரான் பாதிப்பு குணமடைவதாகக் கூறப்படும் நிலையில், அதை உறுதி செய்யும் வகையிலேயே இது அமைந்துள்ளது.

பிரதமர் மோடி
இந்நிலையில், ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், லாக்டவுன் குறித்தும் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "புதிய கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ள நிலையில், நாம் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டிய நேரம் இது. தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. எனவே, பொதுமக்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை நாம் தொடர்ந்து முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.
Recommended Video

ஆக்சிஜன் கருவிகள்
மேலும் மாநிலங்களுடன் இணைந்து செயல்படவும், அவற்றின் கொரோனா கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளுக்கு உதவும்படியும் பிரதமர் மோடி மத்திய அரசுக்கு அறிவுறுத்தினார். புதிய உருமாறிய கொரோனாவால் ஏற்படும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் திறன் கொண்ட மாவட்ட அளவில் சுகாதார அமைப்புகளின் அவசியத்தையும் பிரதமர் மோடி இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தினார். அனைத்து மாநிலங்களிலும் போதியளவு ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் சார்ந்த கருவிகள் இருப்பதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications