'பிரதமர் மோடி சர்வாதிகாரியா? சான்ஸே இல்லை.. தேசம் கண்ட சிறந்த ஜனநாயகத் தலைவர் அவர்..' அமித் ஷா பளீச்
டெல்லி: பிரதமர் மோடி சர்வாதிகாரி அல்ல என்று தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த தேசம் சந்தித்ததிலேயே அவர் மிகச் சிறந்த ஒரு ஜனநாயகத் தலைவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 7ஆம் தேதியுடன் பொது வாழ்க்கைக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. நரேந்திர மோடி, 2001 முதல் 2014 வரை 13 ஆண்டுகள் குஜராத் முதல்வராகவும். 2014இல் தொடங்கி 7 ஆண்டுகள் நாட்டின் பிரதமராகவும் இருந்து வருகிறார்.
இதையொட்டி உள்துறை அமைச்சர் அமித் ஷா அரசுக்குச் சொந்தமான சன்சாட் தொலைக்காட்சிக்குச் சிறப்புப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பிரதமர் மோடி குறித்து பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அர்த்தமற்ற குற்றச்சாட்டு
அதில் பிரதமர் மோடி சில நேரங்களில் சர்வாதிகாரியைப் போலச் செயல்படுவதாக எழும் குற்றச்சாட்டு குறித்து அமித் ஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "இவை முற்றிலும் அர்த்தமற்ற ஆதாரமற்ற குற்றச்சாடுகள். நான் அவருடன் நீண்ட காலமாகப் பயணித்து வருகிறேன். அவர் யார் பேசினாலும் கூர்ந்து கவனிப்பவர். இப்படியொரு நபரை நான் பார்த்தே இல்லை.

குறைவாகப் பேசுவார்
எதாவது ஒரு பிரச்சினை என ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றால், பிரதமர் மோடி குறைவாகவே பேசுவார். மற்றவர்கள் பேசுவதையே கூர்ந்து கவனிப்பார். இவ்வளவு தூரம் என்ன தான் யோசிக்கிறார் என்று நாங்கள் நினைப்போம். எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் 2,3 ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு, நிதனமாகவே அவர் முடிவெடுப்பார்.

மத்திய அமைச்சரவை
ஆலோசனைக் கூட்டங்களில் அனைவர் கூறுவதையும் அவர் கவனிப்பார். முக்கியமான அதிகாரிகள் கூறுவதை மட்டும் கேட்கும் தலைவர் அவர் அல்ல. அனைத்து அதிகாரிகள் கூறுவதையும் அவர் கேட்பார். எனவே, அவரை சர்வாதிகாரி என்று கூறுவது முழுக்க முழுக்க பொய். அவருடன் வேலை செய்த அனைவருக்கும் அவர் எப்படிப்பட்ட ஒரு தலைவர் எனத் தெரியும். இந்திய அரசியல் வரலாற்றில் மத்திய அமைச்சரவை இப்போது போல என்றைக்கும் ஜனநாயக முறையில் செயல்பட்டதில்லை. இதை அவரை எதிர்ப்பவர்களும் கூட ஒப்புக்கொள்வார்கள்.

சர்வாதிகாரி இல்லை
எதிர்க்கட்சியினர் கூறுவது போல் பிரதமர் மோடி ஒன்றும் சர்வாதிகாரி இல்லை. இந்த தேசம் சந்தித்ததிலேயே சிறந்த ஜனநாயகத் தலைவர் மோடி. எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் பிரதமர் மோடி தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடியவர் அல்ல. அவரின் மரியாதையைக் குலைக்கும் நோக்கில் சிலர் வேண்டுமென்ற தவறான கருத்துக்களைப் பரப்புகிறார்கள். அவர் கடினமான முடிவுகளை எடுக்கக்கூடியவர், ஒழுக்கத்தைப் பெரிதும் விரும்பக்கூடியவர்.

துணிச்சலான முடிவுகள்
அரசு ரீதியான கொள்கை முடிவுகளை எடுக்கும்போது அவர் ஒருபோதும் தனது விருப்பங்களை நுழைத்தது இல்லை. நாங்கள் அரசை மட்டும் நிர்வகிக்க இங்கு வரவில்லை, தேசத்தைக் கட்டமைக்கவே இங்கு வந்திருக்கிறோம் என்று பிரதமர் மோடி அடிக்கடி சொல்லுவார். பணமதிப்பிழப்பு, சட்டப்பிரிவு 370 ரத்து, முத்தலாக் ரத்து போன்றவை பிரதமரின் துணிச்சலான முடிவுகள். இதன் மூலம் அவர் அரசியல் போக்கையே மாற்றியுள்ளார். இதன் காரணமாகவே அவர் மீது தனிநபர் தாக்குதல் அதிகரித்துள்ளது. இருப்பினும், மக்களுக்கு அவர் மீது நம்பிக்கை உள்ளதால், எதிர்க்கட்சியினர் ஒவ்வொருமுறையும் தாக்கும்போதும் அவர் வலிமையடைவே செய்கிறார்" என்று குறிப்பிட்டார்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம் குறித்த எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் அமித் ஷா, "மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டுகிறார்கள். பாஜக அரசு விவசாயிகள் நலனைப் பாதுகாக்க ஏகப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாடு முழுவதும் 11 கோடி விவசாயிகள் ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை பெறுகிறார்கள். ஒரே ஆண்டில் விவசாயிகளுக்கு 1.5 லட்சம் கோடி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அளிக்கும் இந்த பணத்தைக் கொண்டு சிறு, குறு விவசாயிகள் வேளாண்மை செய்து வருகின்றனர். இதனால் அவர்கள் வங்கிகளில் கடன் வாங்கத் தேவையில்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications