அன்று உதயநிதி.. இன்று ஆ.ராசா! சர்ச்சை பேச்சு.. ரவுண்டு கட்டும் பாஜக! காங்கிரசுக்கு சரமாரி கேள்வி
டெல்லி: ஜெய் ஸ்ரீ ராம், பாரத் மாதா கி ஜெய் என்பதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று ஆ.ராசா சமீபத்தில் பேசியிருந்தார். பாஜக இதனை பெரும் சர்ச்சையாக்கி வருகிறது. காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் சேர்ந்து சனாதன தர்மத்தை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகின்றன என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தலின் போது, உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்துக்களை பாஜக பெரும் சர்ச்சையாக்கியிருந்தது. தென் மாநிலங்களில் உதயநிதியின் பேச்சுக்கு பெரிய எதிர்ப்பு எழவில்லை என்றாலும், வடமாநிலங்களில் இது பாஜக வாக்கு வங்கியை உயர்த்த கைகொடுத்தது. 5 மாநில தேர்தல் பிரசாரத்தில் உதயநிதியின் கருத்துக்களை மேற்கோள் காட்டி திமுகவையும், காங்கிரஸையும் பாஜக கடுமையாக தாக்கியது. தேர்தல் முடிவுகளில் இதற்கான பலனையும் பாஜக பெற்றிருந்தது.

இதனையடுத்து தற்போது லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆ.ராசாவின் பேச்சை பாஜக கையில் எடுத்திருக்கிறது. "இந்தியா ஒருபோதும் ஒரு நாடாக இருந்ததில்லை, இது ஒரு துணைக் கண்டம். ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் பாரத் மாதா கி ஜெய் என்பதை ஏற்க மாட்டோம்" என்று சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா பேசியிருந்தார். திமுக தலைவர்களின் வழக்கமான பேச்சுதான் இது என்றாலும், தேர்தல் நெருங்குவதால் இதனை காங்கிரசுக்கு எதிரான பிரச்சாராமாக பாஜக தற்போது மாற்றியிருக்கிறது.
சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது, கர்நாடக சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட பாகிஸ்தான் ஆதரவு முழக்கம், தற்போது ஆ.ராசா பேசியது என அனைத்தையும் கோர்த்து, காங்கிரஸை பாஜக டார்கெட் செய்ய தொடங்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்,
"காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் சேர்ந்து சனாதன தர்மம், ராமர், இந்து மதம் ஆகியவற்றை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகின்றன. மறுபுறம் நாட்டை பிரிக்க நினைக்கும் கும்பல்களுடன் அவர்கள் சேர்ந்து செயல்படுகின்றனர். பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷத்தை எழுப்பி அந்நாட்டின் வெற்றியை கொண்டாடுகின்றனர்" என்று கடுமையாக சாடியுள்ளார்.
ஆ.ராசா மீதான ஊழல் குற்றச்சாட்டை சுட்டிக்காட்டிய அனுராக், "இந்தியா, சனாதன தர்மம், இந்துக்களின் கடவுள் ராமர் ஆகியவற்றிற்கு எதிரான கருத்துக்களை ராசா தொடர்ந்து கூறி வருகிறார். இவர் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். இப்போது கேள்வி என்னவெனில், அவரை பாதுகாப்பது யார்? இதற்கு காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
அதாவது, ஆ.ராசாவின் பேச்சை காங்கிரஸ் ஆதரிக்கிறதா? பாகிஸ்தான் ஆதரவு முழக்கங்களை காங்கிரஸ் ஏற்கிறதா? இந்தியாவை ஒரு நாடாக காங்கிரஸ் கருதவில்லையா? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரிவினைவாத அரசியல் செய்வது ஏன்? என்று அனுராக் தாக்கூர் கேள்வியெழுப்பியுள்ளார்.
அனுராக்கின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், திமுகவின் கருத்தை காங்கிரஸின் கருத்தாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது என்று பதிலடி கொடுத்திருக்கின்றன.
எதிர் வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணியிலிருந்து ஏற்கெனவே இரண்டு கட்சிகள் கழன்று பாஜகவில் ஐக்கியமாகிவிட்டது. எனவே மற்ற கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயன்று வருவதாகவும், அது பலனளிக்காத பட்சத்தில் கூட்டணிக்குள் குழப்பங்களை ஏற்படுத்த பாஜக முயலும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications