பிரதமர் மோடி அதிரடி? மத்திய அரசில் திடீரென நம்பர் 2 ஆக உயர்த்தப்பட்டாரா சிவராஜ் சிங் சவுகான்?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் மத்திய அமைச்சருமான சிவராஜ் சிங் சவுகான் திடீரென நம்பர் 2 இடத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடியின் திட்டங்களை செயல்படுத்துதல், கண்காணிக்க மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் காண்காணிப்பு குழுவை மோடி அமைத்ததை அடுத்து இந்த புதிய சர்ச்சை உருவாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்கள் சீனியர்களாக இருப்பவர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்காரி உள்ளிட்டோர். மத்திய அரசில் நம்பர் 2 யார் என்பதில் எப்போதும் ராஜ்நாத்சிங்- அமித்ஷா இடையே போட்டி என்பதுதான் யதார்த்தம் என்கின்றன டெல்லி தகவல்கள். அதுவும் பிரதமர் மோடி வெளிநாடு செல்லும் போது கேபினட்டில் 2-வது இடம் யாருக்கு என்கிற விவாதம் எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் திடீரென மத்திய அரசில் பிரதமர் மோடியின் அதீத நம்பிக்கைக்குரியவராக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் முன்னேறியிருக்கிறாராம். பிரதமர் மோடி அறிவித்த திட்டங்களை செயல்படுத்தவும் கண்காணிக்கவும் தற்போது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால்தான் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அரசில் நம்பர் 2 இடத்துக்கு உயர்த்தப்பட்டுவிட்டாரா? என்கிற சர்ச்சை உருவாகி இருக்கிறது.
பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டாவின் பதவி காலம் முடிவடைய இருக்கும் நிலையில் சிவராஜ் சிங் சவுகான் பெயர் அந்த பதவிக்கு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி அரசில் நம்பர் 2 இடம் என்கிற பேச்சும் வலுத்துக் கொண்டிருக்கிறது. பாஜகவில் ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ்.ஆதரவுடன் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு நிதின் கட்காரி முன்னிறுத்தப்பட்டிருந்தார். இதனை நிதின் கட்காரியே பகிரங்கமாகவும் தெரிவித்திருந்தார். தற்போதைய நிலையில் பாஜகவில் இனி சில காலம் சிவராஜ் சிங் சவுகானை மையமாக வைத்து அத்தனை புயல்களும் வீசும் என்கின்றனர் மூத்த அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications