கூட்டணி ஆட்சிக்கு கைமாறு.. அமைச்சரவையில் 2 சீட் ஒதுக்கீடு! நிதிஷ்குமாரை குஷிப்படுத்த பாஜக முயற்சி
டெல்லி: மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணியின் 3.0 அரசாங்கத்தில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 2 சீட்கள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. எனவே, ஆதரவு எம்பிக்களின் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் உரிமை கோரினார். குடியரசுத் தலைவரும் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், நாளை மாலை நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார்.

நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையுடன் மோடி பதவியேற்கிறார். பிரதமர் பதவிக்கும், என்டிஏ ஆட்சிக்கும் தூண்களாக இருப்பது நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிகள்தான். இந்த இரண்டு கட்சிகளின் எம்பிக்களை கழித்துவிட்டால் என்டிஏ கூட்டணிக்கு வெறும் 260 எம்பிக்கள்தான் மிஞ்சுவார்கள். ஆட்சியமைக்க 272 தொகுதிகள் தேவை.
எனவே பாஜக இருவரையும் தாங்கு, தாங்கு என்று தாங்குகிறது. என்ன கேட்டாலும் செய்ய தயார் என ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள பாஜக முன்வந்திருக்கிறது. எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மத்திய அமைச்சரவையில் மிக முக்கிய இலாக்காக்களை இரண்டு கட்சிகளும் குறி வைத்திருக்கின்றன. அதாவது மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த இரண்டு எம்பிக்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.
அமைச்சர் சீட்டுக்காக லாலன் சிங் மற்றும் ராம்நாத் தாகூர் ஆகிய இரு மூத்த தலைவர்களின் பெயரை ஐக்கிய ஜனதா தளம் முன்மொழிந்துள்ளது. லாலன் சிங் பீகாரின் முங்கர் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார். அதேபோல ஐக்கிய ஜனதா தளத்தின் ராஜ்யசபா தலைவராக இருக்கும் ராம்நாத் தாகூர் பாரத ரத்னா விருது பெற்ற கர்பூரி தாக்கூரின் மகன் ஆவார்.
நாளை மோடி பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், அமைச்சரவையை தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சந்திரபாபு நாயுடு தரப்பில் 4 லோக்சபா தொகுதிகளையும், மக்களவை சபாநாயகர் பதவியும் கேட்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தவிர பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்தை கோரவும் இரு கட்சி தலைவர்களும் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில் பிரதமரின் பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் வரலாற்றை பொறுத்த அளவில், 1947 தொடங்கி 1952 வரை சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு இருந்தார். காங்கிரஸ் கட்சியால் அவர் பிரதமராக அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து 1952 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் 1957 வரை இரண்டாவது முறையும் நேரு பிரதமராக பதவி வகித்தார். இந்த காலத்தில் பொருளாதாரம் மற்றும் சமூக சீர்திருத்தங்களை அமல்படுத்தினார்.
இதற்கு அடுத்து 1957ல் நடந்த லோக்சபா தேர்தல்களிலும் நேரு வெற்றி பெற்றார். அடுத்த 5 ஆண்டு காலத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வெளியுறவுக் கொள்கையில் தொடர்ந்து கவனம் செலுத்தினார். பின்னர் 1962ம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் நேரு வெற்றி பெற்றார். ஆனால், அவரது உடல்நிலை சரிவை சந்திக்க தொடங்கியது. இறுதியாக 1964ம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி நேரு உயிரிழந்தார். அவர் மறையும் வரை பிரதமராகவே தொடர்ந்தார்.
இந்திரா காந்தியும் கூட 3 முறை பிரதமராக இருந்திருக்கிறார். ஆனால் நேருவை போல தொடர்ந்து இருந்ததில்லை. 1966ம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரியின் மறைவை தொடர்ந்து, 1967ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று இந்திரா காந்தி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் காங்கிரஸ் நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
அதன் பின்னர் 1971ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். இந்த சமயத்தில் இவர் கடும் நெருக்கடியை சந்தித்திருந்தார். 1971ல் இந்தியா-பாகிஸ்தான் போர் நடைபெற்றது. பின்னர் வங்கதேசம் உருவாக்கப்பட்டது. இப்படியாக 1975ல் எம்ர்ஜென்சியை கொண்டு வந்தார்.
கடைசியாக 1980ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார். இந்த காலத்தில் காலிஸ்தான் பிரச்னை மற்றும் இலங்கை பிரச்னை என பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டிருந்தார். இறுதியாக 1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி அவர் தனது சொந்த பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வரலாற்றின் தொடர்ச்சியாக, தற்போது நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications